×

காவல் நிலையங்களில் எப்ஐஆர் போட்டும் இறுதி தகவலறிக்கை தாக்கல் செய்யப்படாத லட்சம் வழக்குகள்: ஐகோர்ட் நீதிபதி தகவல்

தூத்துக்குடி:  தூத்துக்குடியில் புதிய குடும்ப நல நீதிமன்றம் மற்றும் போக்சோ  கோர்ட் திறப்பு விழா நேற்று நடந்தது. முதன்மை விருந்தினர்களாகப் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சுந்தர் ஆகியோர் புதிய நீதிமன்றங்களை  திறந்துவைத்தனர். விழாவில் நீதிபதி பாரதிதாசன் பேசியதாவது:தமிழகத்தில் இளம்  சிறார் வன்முறை பெருகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகநீதி விரைந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக போக்சோ நீதிமன்றம் தனியாக  திறக்கப்படுகிறது. நாங்கள் நீதிமன்றத்தை திறந்து வைத்துள்ளோம். இங்கு  வழக்குகள் வராமல் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்ப நல  வழக்குகளும், போக்சோ வழக்குகளும் அதிகளவில் வருவது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக  
இல்லை.

நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் தேங்கியதற்கு நீதிமன்றம் மட்டும் காரணமில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள்  உள்ளன. காவல் நிலையங்களில் எப்ஐஆர் போடப்பட்டபோதும் இதுவரை 1 லட்சம் வழக்குகள் இறுதி தகவலறிக்கை தாக்கல் செய்யப்படாமல் உள்ளன. மேலும், வழக்குகளை  சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு ஒதுக்குவதிலும், காலதாமதம் ஏற்படுகிறது. நீதிமன்றத்தால் பல்வேறு வழக்குளை விசாரிக்க காலதாமதம் ஏற்படுகிறது என்பதால் நீதியை வேறு வகையில் வழங்க முடியாது. நீதியை வழங்கிட நீதிமன்றத்தால் மட்டுமே முடியும். இவ்வாறு நீதிபதி பாரதிதாசன் பேசினார். நீதிபதி சுந்தர் பேசுகையில், ‘‘ஒரு வழக்கில் நீதிபதிகள், வழங்குகின்ற தீர்ப்பை காட்டிலும், அந்த வழக்கு சம்பந்தமாக வாதாடுகின்ற வக்கீல்களுக்கு அந்த தீர்ப்பின் வெற்றி பெருமை சேர்த்து தரும். எனவே, வக்கீல்கள் சட்ட புத்தங்களை படித்து, தங்களது வாதாடும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் சரியான தீர்வு காண வேண்டும். தற்போது புதிதாக தொடங்கப்பட்ட நீதிமன்றங்களையும் சேர்த்து நீதித்துறையில் 179 நீதிபதிகள் பணியிடங்களும், 148 பணியாளர்கள் இடங்களும் காலியாக உள்ளன. இவை அனைத்தும் தகுதித்தேர்வு மூலம் விரைவில் நிரப்பப்படும்’’ என்றார்.

Tags : police stations ,FIRs , FIR, police stations, lakhs of cases,filed
× RELATED 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு