சேலம்: சேலத்தில் பெற்றோரிடம் காதலை மறைத்து, பேய் பிடித்ததாக நாடகமாடிய இளம்பெண்ணை சரமாரியாக பிரம்பால் அடித்து, உண்மையை வரவழைக்கும் திருநங்கை சாமியாரின் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சேலம் கன்னங்குறிச்சி 7-வது வார்டில், காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு திருநங்கை ஒருவர், வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பேய் ஓட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த திருநங்கை சாமியார், இளம்பெண் ஒருவருக்கு பேய் ஓட்டும் வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சேலம் குகையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை பெற்றோர் அழைத்து வந்து திருநங்கை சாமியார் முன் அமர வைக்கின்றனர்.
உடனே சாமியார், அந்த பெண்ணின் விபூதியை தலையில் போட்டு உனக்கு பேய் பிடித்திருக்கிறதா? எனக் கேட்டபடி, தன் கையில் வைத்திருக்கும் பிரம்பால் மாறி, மாறி சரமாரியாக அடிக்கிறார். அப்போது அந்த பெண், தனக்கு பேய் பிடித்திருக்கிறது. நான் வந்த இடத்திற்கே திரும்பி செல்கிறேன் எனக்கூறுகிறார். ஆனால், தொடர்ந்து பிரம்படி விழுந்ததால், தனக்கு பேய் பிடிக்கவில்லை என்றும், தான் ஒரு வாலிபரை காதலிக்கும் நிலையில், தனக்கு வேறு இடத்தில் பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதால் பேய் பிடித்திருப்பதாக நடிக்கிறேன் என உண்மையை கூறுகிறார். அதன்பின்னரும், என்னிடமே பொய் சொன்னாயா என கேட்டபடி, பிரம்பால் மீண்டும் அடிக்கிறார். பிறகு, காதலனை மறப்பதாக கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்ய வைத்து, அவரது தந்தையை தாண்டி வரச் செய்கிறார். அடுத்தடுத்து உடலில் விழுந்த பிரம்படியால், அந்த பெண் அலறியபடி காதலை மறப்பதாக சத்தியம் செய்து, பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொள்கிறார். இந்த வீடியோ, சாமியார் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது, இந்த வீடியோ வைரலாகியிருப்பதால் பாதிக்கப்பட்ட இளம்பெண் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர். காஞ்சனா பட பாணியில் காதலை மறைக்க பேய் பிடித்திருப்பதாக பெண் கூறுவதும், பேய் ஓட்டும்போது உண்மை வெளிவருவதுமாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.