×

சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் 18 ஆயிரம் பக்கங்களை கொண்ட வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு: நீதிமன்ற உத்தரவையடுத்து பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை

சென்னை: சிலை கடத்தல் வழக்கு தொடர்பான 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை பொன்.மணிக்கவேல் உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தார்.தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி ஐஜி.பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த மாதம் 30ம் தேதி முடிவடைந்தது. பின்னர் தமிழக உள்துறை செயலாளர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஐஜியாக அன்புவை நியமித்து உத்தரவிட்டார். இதற்கிடையே கடந்த ஓராண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கையாண்ட வழக்கு ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது. ஆனால் சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காமல் பொன்.மாணிக்கவேல் காலம் தாழ்த்தி வந்தார்.

 இதையடுத்து தமிழகம் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம், ‘ஒரு வாரத்தில் பொன்.மாணிக்கவேல் கையாண்ட சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அதைதொடர்ந்து பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஓராண்டு சிறப்பு அதிகாரியாக விசாரணை நடத்திய வழக்கின் விபரங்கள் அடங்கிய 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அதன்படி டிஎஸ்பி வழக்கு ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங்கிடம் ஒப்படைத்தார்.

Tags : Unit , Handing ,18,000 pages ,case papers ,Anti-Trafficking Unit,Court order
× RELATED போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...