×

ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்

சென்னை: தமிழக சட்டப்பேரவை ஜனவரி முதல்வாரத்தில் கூடுகிறது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் கூடுவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் அன்றைய தினம் சட்டப்பேரவையில் உரையாற்றுவார். இந்த நிலையில் 2019ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தை கடந்த ஜனவரி 2ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி ெதாடங்கி வைத்தார். அதன்பின்பு நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 8ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கை விவாதத்துக்கு பின்பு பிப்ரவரி 14ம் தேதி கூட்டதொடர் முடித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் துறை ரீதியான மானிய கோரிக்கை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்ட தொடர் கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்கி ஜூலை 20ம் தேதி வரை நடைபெற்றது.இந்த நிலையில் ஒரு சட்டப்பேரவை கூட்டதொடருக்கும் மற்றொரு கூட்ட தொடருக்குமான கால இடைவெளி 6 மாதங்களை தாண்டி இருக்க கூடாது என்பது விதியாகும். இந்த நிலையில் கடந்த ஜூலை 20ம் தேதியுடன் பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்தது. எனவே, அடுத்த கூட்ட தொடர் வரும் ஜனவரி 19ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரும் 27, 30ம் தேதிகளில் நடைபெறுகிறது. தொடர்ந்து இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறுகிறது. எனவே, உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு கூட்ட தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி முதல் வாரத்தில் முதல் கூட்ட தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. மேலும், இந்த நிதியாண்டில்தான் தமிழக அரசு தனது முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியும். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவிருப்பதால் செலவுகளுக்கான நிதியை மட்டுமே பெற முடியும். எனவே, இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.மேலும், வரும் பிப்வரியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, வாக்குகளை கவரும் வகையில், இந்த கூட்டத் தொடரில் புதிய திட்டங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Banwarilal Brokit ,Tamilnadu Assembly , first week ,January, Tamilnadu Assembly , Governor Banwarilal Brokit
× RELATED தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில்...