×

40 வருடங்களாக அடிப்படை வசதி இல்லை உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு: பண்ருட்டி அருகே பரபரப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே 40 வருடங்களாக அடிப்படை வசதிகள் செய்து தராத அரசை கண்டித்து உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையத்தில் புதுநகர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த சுமார் 700 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 40 வருடங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் வசித்து வருகின்றனர். இதனைக்கண்டித்து இப்பகுதி பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் 40 வருடங்களாக வசித்து வருகிறோம். ஆனால் குடியிருக்கும் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.
 இதனால் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் மண்ணெண்ணை விளக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அரசு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வீடுகளும் கட்டி தரப்படவில்லை.
 மேலும் கழிப்பறை வசதி இல்லை. தெருக்களில் சிமெண்ட் சாலை வசதியில்லாததால் தெருக்களில் மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

  இதனால் கொசு தொல்லையால் நோய்கள் பரவி அவதிப்படுகிறோம். மேலும் வீட்டுமனை பட்டா இல்லாததால் வங்கிகளில் கடன் வாங்க முடியாமல் சிரமப்படுகிறோம். பிள்ளைகளை படிக்க வைக்க சிரமப்படுகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறித்துள்ளதால் பண்ருட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Tags : Government ,Panruti ,Paraburam , infrastructure, Local election, boycott, Paraburam ,Panruti
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு