×

சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு நள்ளிரவில் வீட்டில் கட்டியிருந்த பசுமாட்டை கடித்து கொன்ற நரி: வனத்துறையினர், போலீசார் விசாரணை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே நள்ளிரவில் வீட்டின் தொழுவத்திற்குள் புகுந்த நரி, அங்கு கட்டியிருந்த பசுமாட்டை கடித்துக்கொன்றுவிட்டு தப்பியது. இதையடுத்து வனத்துறை மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஆலம்பாடி கிராமம் மேலத்தெருவில் வசித்து வருபவர் தனசேகரன் (65). இவருக்கு சொந்தமான பசுமாட்டை நேற்றிரவு வீட்டின் தொழுவத்தில் கட்டி வைத்திருந்தபோது மர்ம விலங்கு கடித்து கொன்றுவிட்டு தப்பியது. மேலும் மாட்டின் காதையும் மர்ம விலங்கு கடித்து தின்றுள்ளது.

இன்று காலை பசுமாடு இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த தனசேகரன் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கடலூர் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவின்பேரில் சிதம்பரம் வனச்சரக அலுவலர் சரவணகுமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் சேத்தியாத்தோப்பு எஸ்ஐ மாணிக்கராஜா, காவலர் கிருபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பசுமாட்டை கடித்து கொன்றது நரி என வனச்சரக அலுவலர் தெரிவித்தார். மேலும் அங்குள்ள கால்தடம் நரியின் கால்தடத்தை ஒத்துப்போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே நரி கடித்து இறந்த பசுமாட்டை கால்நடை மருத்துவர் பரமேஸ்வரி பிரேத பரிசோதனை செய்தார். நரி கடித்து பசுமாடு இறந்த சம்பவம் சேத்தியாத்தோப்பு பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த கிராமத்தில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முகாமிட்டுள்ளனர்.

Tags : greenhouse ,Forest department ,Chethiyathoppu ,Chethiyathoppu: Forest Department , fox , killed,Chethiyathoppu, Forest Department, police
× RELATED கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில்...