×

குடியுரிமை சட்டம் அமல்படுத்த எதிர்ப்பு ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்

பாட்னா: குடியுரிமை சட்டம் அமல்படுத்துவதை எதிர்த்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது பதவியை ராஜினாமா செய்து நிதிஷ் குமாருக்கு கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபலமான அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ‘சிட்டிசன்ஸ் பார் அக்கவுண்டபுள் கவர்னன்ஸ்’ என்ற அமைப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடத்தி வந்தார். அதில் தான் சுனில் என்பவரும் அங்கம் வகித்தார். இருவருக்கும் இடையே உருவான கருத்து வேறுபாட்டால், பிரசாந்த் கிஷோர் ‘இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி’ என்ற புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். மோடி பிரதமர் ஆவதற்கும், நிதிஷ்குமார் பீகார் முதல்வர் ஆவதற்கும், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முதல்வர் ஆவதற்கும் பிரசாந்த் கிஷோர் வழங்கிய தேர்தல் ஆலோசனை பிரதான காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.தற்போது, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின், துணை தலைவராக உள்ள பிரசாந்த் கிஷோர், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக மக்களவை, மாநிலங்களவையில் தங்கள் கட்சி எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், கட்சித் தலைவர் நிதிஷ்குமார் உடன்படவில்லை. இந்த மசோதாவிற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்ததால், நிதிஷ்குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் கருத்து வேறுபாடு இருந்துவந்தது.

இந்நிலையில் அடுத்தாண்டு நடக்க உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்று அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். டெல்லியில் ஆட்சியை தக்கவைப்பதில் பாஜவுடன் கடும் போட்டியை சந்திக்க நேரிடும் என்பதால், பிரசாந்த் கிஷோரின் உதவியை ஆம்ஆத்மி கட்சி நாடி உள்ளது.கடந்த சில நாட்களாக நிதிஷ்குமாருடன் இருந்த மோதலுக்கு பின், அரவிந்த் கெஜ்ரிவாலின் ட்விட்டர் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாக, பிரசாந்த் கிஷோர் நேற்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், கட்சி பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி நிதிஷ்குமாருக்கு கடிதம் எழுதி உள்ளார். ஆனால், கிஷோரின் கடிதத்தை நிதிஷ் குமார் நிராகரித்ததாக தகவல்கள் கூறுகிறது. குடியுரிமை சட்டம் மாநிலத்தில் அமல்படுத்துவது குறித்து, கிஷோரின் கருத்துகள் ஏற்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Tags : Prashant Kishore ,United ,Janatha Vimukthi Peramuna , Prashant Kishore,United, Janatha Vimukthi Peramuna
× RELATED ஆந்திரா சட்டமன்ற தேர்தலில்...