×

நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு வீராங்கனை வர்த்திகா சிங் ரத்தத்தில் கடிதம்

டெல்லி: நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை தனக்கு வழங்க கோரி, சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கடந்த 2012ம் ஆண்டு, ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு ரோட்டில் வீசப்பட்டார். சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி நிர்பயா இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

குற்றவாளிகளை தூக்கிலட வேண்டும் என்றும் அவர்களை கொல்ல வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. நிர்பயா என பெயரிடப்பட்ட அந்தப் பெண்ணின் பலாத்கார கொலை வழக்கில் 5 குற்றவாளிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு உறுதி செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன், சீர்திருத்த பள்ளியில் 3 ஆண்டு தண்டனை முடித்ததால் விடுவிக்கப்பட்டான். ராம் சிங் என்ற குற்றவாளி டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோரின் மறுபரிசீலனை மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த 17ம் தேதி நிராகரித்தது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட நிர்பயாவின் பெற்றோர் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் டிசம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் தூக்கிலிடும் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே குற்றவாளிகள் 4 பேரையும் விரைவில் தூக்கிலிட திகார் சிறை நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் பெண் ஒருவராலேயே குற்றவாளிகள் நால்வருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், தனது கோரிக்கைக்கு பெண் எம்.பிக்களும், நடிகைகளும் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வர்த்திகா சிங் பேட்டி;
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலுடும் பணியை தனக்கு வழங்கிட வேண்டும். பெண் ஒருவர், மரண தண்டனையை நிகழ்த்திய செய்தி நாடு முழுவதும் சென்று சேரும். எனக்கு பெண் நடிகைகள், எம்.பி.,க்கள் ஆதரவளிக்க வேண்டும். இது சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என நம்புகிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : sex offenders ,Amit Shah Nirbhaya ,Amit Shah , Nirbhaya sex case, Amit Shah, Vajika Singh, letter in blood
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...