×

ஏன் தொடர்கிறது என்கவுன்டர் கொலைகள்? உயிரைப் பறிக்கும் உரிமை காவல்துறைக்கு இருக்கிறதா?

என்கவுன்டர் கொலைகள் எப்போது வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் நடத்தப்படலாம். அவர் குற்றவாளியாய் இருக்க வேண்டிய அவசியமில்லை.  மேலிட உத்தரவின் கீழ் தோட்டாக்கள் வெடிக்க வேண்டும். அச்சம் ஏற்படுத்தி பிரச்னையை முடிக்க வேண்டும் என்பது தான் முடிவாக இருக்கிறது.

விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே தோழா ! தோழா !  
வீரர் உமக்கே வணக்கம் வணக்கம் தோழா ! தோழா !
காரிருள் சூழ்ந்த கரிய வானத்தே  
தாரகை போன்று ஜொலித்து நிற்கின்றீர்
போராடும் எமக்கு புத்துயிர் தாரீர் தோழா ! தோழா

இந்த அற்புதமான பாடலை எழுதியவர் மதுரையைச் சேர்ந்த கவிஞர் மணவாளன். இந்தி பண்டிட். இன்றளவும் தமிழக உழைப்பாளி மக்களின் விழாக்களில் இந்த பாடல் பாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு 1948ம் ஆண்டு முதல் 1951ம் ஆண்டு வரை கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது.  மதுரை பீபீகுளத்தில் 1948ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அந்த இந்தி பண்டிட்டும், மில் தொழிலாளியான மாரியும் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.  
சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களான சுட்டுக்கொல்லப்பட்ட மாரி, மணவாளன் உடல்கள் அவர்களது உறவினர்கள் வசம் ஒப்படைக்கவில்லை. போலீசாரே  அடக்கம் செய்தனர். இதுபோல இந்தியா முழுவதும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய பலர் என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டது மிகப்பெரிய ரத்த வரலாறு.

கேள்விக்குள்ளாக்கப்படும் சட்டம்: இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்ச என்கவுன்டர்கள் நடந்துள்ளன. யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற மார்ச் 2017க்குப் பிறகு சுமார் 433 என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாக அந்த மாநில அரசின் அதிகாரபூர்வப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல ஆந்திராவில் செம்மரக்கடத்தல் என பல தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். என்கவுன்டர் கொலைகள் மட்டுமின்றி காவல்நிலைய மரணங்களும் அதிகமாக நடைபெற்று வருகின்றன. தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (என்சிஆர்பி) அறிக்கைபடி, 2017ம் ஆண்டில் 100 பேர் போலீஸ் காவலில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 58 பேர், கைதான பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், காவல் மரணங்கள் தொடர்பான 62 வழக்குகளில், 33 காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்; 27 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் யாரும் தண்டனைக்குள்ளாகவில்லை என்பது தான்.  என்கவுன்டர் மற்றும் காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக  உச்சநீதிமன்றத்தின் அடிப்படை நெறிமுறைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன.

நீதிபதிகளின் கவலை: ‘‘நீதியை  பழிவாங்கலின் மூலம் பெறக்கூடாது. பழிவாங்கலின் ஊடாக கிடைக்கப்படும் நீதி  அதன் அம்சத்தை இழப்பதாக நான் நினைக்கிறேன்’’ என இந்திய உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி பாப்டே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். மேலும் அவர்  கூறுகையில், ‘‘கிரிமினல் வழக்குகளில் நீதி வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதம்  மற்றும் தொய்வு குறித்து ஆராய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை’’ என்றும்  தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைமை நீதிபதியாக 1993 - 1994ல் இருந்த வெங்கடாச்சலய்யா ஒரு தீர்ப்பில், ``நமது  அரசியலமைப்பில், மற்றொரு உயிரைப் பறிப்பதற்கான எந்தவொரு உரிமையும்  காவல்துறைக்கு வழங்கப்படவில்லை. காவல்துறை தன்னுடைய செயலினால், ஒருவர்  கொல்லப்படுவாரானால், அது மரணத்தை விளைவிக்கும் குற்றமாகத் தான்  பொருள்கொள்ளப்படும்’’ என்று கூறினார்.

நிர்பயா நீதி என்ன ஆனது? பாலியல் குற்ற வழக்குகளில் விசாரணையை கண்காணிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்தது. அதன்படி டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 7 மாநிலங்களில் அந்த குழு ஆய்வு நடத்தியது. 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஆண்டு பிப்ரவரி வரை பதிவான பாலியல் குற்ற வழக்குகள் குறித்து அமைச்சகத்தின் குழு ஆராய்ந்தது. அதில் சுமார் 47 ஆயிரம் பாலியல் வழக்குகளில் 26 ஆயிரம் வழக்குகளுக்கு மட்டுமே குறித்த காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேலான பாலியல் வழக்குகள் 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருப்பது அம்பலமானது. கடந்த ஜனவரியில் இருந்து ஜூன் மாதம் வரை பதிவான 24 ஆயிரம் பாலியல் வழக்குகளில் 4 சதவீத வழக்குகள் மட்டும் தான் தீர்வு காணப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த லட்சணத்தில் தான் பாலியல் வழக்குகளில் காவல்துறையின் நடவடிக்கை உள்ளது.

பாலியல் வழக்குகுளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைப்பதற்கான நிர்பயா திட்டத்தின் மூலம் 767 கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், 10 மாதங்கள் கடந்தும் அத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இப்படியான மனநிலை தான் பாலியல் வழக்கில் என்கவுன்டரை வரவேற்கும் நிலைக்கு மக்களைத் தள்ளுகிறது. எந்த வழக்கு என்றாலும், முதல் தகவல் அறிக்கையில் இருந்து சாட்சிகளைத் தயார் செய்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவது காவல்துறையின் கடமை. ஆனால், அப்படி செய்யாததன் விளைவு நீதி தாமதமாவதுடன்,  குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர். இல்லாவிட்டால் ஜாமீனில் வெளியே வந்து விடுகின்றனர். 2018ம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் காவல்துறையிடம் பதிவு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவு குற்ற வழக்குகளில் 12 முதல் 20 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் பூமியான உன்னாவ்:  கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரலில் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் விசாரித்தார். ``இந்த வழக்கு இதுவரை கடந்து வந்த பாதையை பார்த்தால் கவலை அளிக்கிறது. இதில் ஏன் இதுவரை முறையாக எப்ஐஆர் கூட பதியவில்லை. அதிலும் பதியப்பட்டு இருக்கும் எப்ஐஆர் எல்லாம் ஏன் குற்றம்சாட்டிய நபர்களுக்கு எதிராகவே இருக்கிறது’’ என்று கோகாய்  வருத்தப்பட்டார். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்நிலைய விசாரணையில் மரணமடைந்தார். அத்துடன் நீதிமன்றம் செல்லும் வழியில் அப்பெண் சென்ற கார் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு உறவினர்களும் கொல்லப்பட்டனர்.

அதே உன்னாவ் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். ஆனால், மார்ச் மாதம் தான் காவல்துறையினர் வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக ரேபரேலி நீதிமன்றத்திற்கு சென்ற பெண் ணை ஏற்கனவே பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேர் உள்பட 5 பேர் கடத்திச் சென்று மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்துக் கொன்றனர். காவல்துறை உரிய முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த பெண் காப்பாற்றப்பட்டிருப்பார். அரசியல் பின்புலத்துடன் ஜாமீனில் வந்த  குற்றவாளிகள் மீண்டும் அந்த பெண்ணைக் கொலை செய்துள்ளனர் என்பது தான் வேதனையான விஷயம்.

நீதியும், விரைவு நீதிமன்றங்களும்... குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்பை வழங்க முடியாத சட்ட அமைப்பு மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள். அதனால் என்கவுன்டரை கொண்டாடுகின்றனர். அதை அறிந்து அவர்கள் செய்யவில்லை. ஏனெனில், பல என்கவுன்டர் வழக்குகளில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மக்கள் தான். ஹைதராபாத் என்கவுன்டருக்கு எதிராக உச்ச நீதிமன்றதில் பொது நலவழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட நான்கு பேரும் உண்மை குற்றவாளிகள் தானா? அல்லது வழக்கை முடிக்க முடிக்கப்பட்டவர்கள் தானா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஏனெனில், கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட்ட அடுத்த 2 நாளில் அதே பகுதியில் மீண்டும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தான் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

2012ம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்காரச் சம்பவத்துக்குப் பிறகு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக 2013ம் ஆண்டு நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் கொண்டுவந்த பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை குறையவில்லை. 35 சதவீதம் அதிகரித்தது. எனவே, பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான கல்வி அவசியமாகிறது. இந்தியா முழுவது பல்வேறு நீதிமன்றங்களில் 1,66,882 பாலியல் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் இருந்தால் அந்த மாவட்டத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாலியல் பலாத்கார வழக்குகளை நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதில் 389 விரைவு நீதிமன்றங்கள்,  போக்சோ தொடர்பான பாலியல் வழக்குகளைமட்டும் விசாரிக்கும். இதர 634 நீதிமன்றங்கள் அனைத்து பாலியல் வழக்குகளையும் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  இதுவரை 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மத்திய சட்ட அமைச்சகம் 5 முறை சுற்றறிக்கை அனுப்பியும் 15 மாநில அரசுகள் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்ற புகாரும் அமைந்துள்ளது. இப்படியான தாமதங்கள் தான் நீதியின் மீதான நம்பிக்கையின்மையால் என்கவுன்டர்களைக் கொண்டாடச் செய்கிறது. இப்படியான கொண்டாட்டங்கள் ஜனநாயகத்திற்கு என்றென்றும் நல்லதல்ல.

வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் :
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கூறுகையில், ``விசாரணைக்கு முன்பே கோவலன் கொல்லப்பட்டது போல, விசாரணை முடியும் முன்பே பலர் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்படுகின்றனர். இப்படியான என்கவுன்டர்களை அரசுகள் ஆதரிப்பதும், நீதிமன்றம் போனால் நீதி கிடைக்காது என்ற மக்களின் மனோபாவம் மக்களை என்கவுன்டரை கொண்டாடச் செய்கிறது. இப்படி கொலை செய்யப்படுவதில் தீவிரவாதிகள் மட்டுமல்ல அப்பாவி பொதுமக்களும் பலியாகிறார்கள். முறையான விசாரணை நடத்தப்பட்டு நீதியின் வழியே தீர்ப்பளிக்க வேண்டும். என்கவுன்டர்களை ஆதரிக்கும்  மனோபாவம் ராணுவ ஆட்சியை ஆதரிப்பது போன்றது தான். எனவே, வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உயர்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பாலியல் உள்ளிட்ட குற்றவழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

தூக்குத்தண்டனை அளிக்க வேண்டும்:
காவல்துறை முன்னாள் அதிகாரி வி.பாலசுப்பிரமணியம் கூறுகையில், ``தர்மபுரி நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், `காவல்துறை தனக்கான எல்லைக்கோட்டை மீறக்கூடாது என்றும், நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் இருந்து தான் செயல்பட வேண்டும்’ என்றும் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் குறிப்பிட்டார். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் காவல்துறையினர் என்கவுன்டர்களில் ஈடுபடுகின்றனர். நீதி வழங்கும் பொறுப்பு எப்போதும் சட்டத்திடம் தான் இருக்க வேண்டும். போலீசாரின் துப்பாக்கி ஒரு போதும் தண்டனை அளிக்கக்கூடாது. பாலியல் வழக்குகளை குறைந்த காலத்திற்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும்.

ஆனால், வழக்குகள் முடியவே காலதாமதமாகிறது. நெல்லையில் 7 பாலியல் வழக்குகளில் 5 வழக்குகள் எப்ஐஆர் லெவலிலேயே உள்ளது. இன்று தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து விட்டது. எனவே, இப்படியான வழக்குகளை 100 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்காததால் போலீசாரின் என்கவுன்டர் குறித்த மனித உரிமை மீறல் குறித்து மக்களுக்குத் தெரியாமல் உள்ளது. பாலியல் கொடுங்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போட சட்டம் இயற்ற வேண்டும். முறையான விசாரணைக்குப் பிறகே தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்று கூறினார்.

50 போலீசாரை 4 பேர் எப்படிதாக்க முடியும்?:
மனித உரிமை செயற்பாட்டாளரும், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநருமான ஹென்றி டிபேன் கூறுகையில், ``ஹைதராபாத்தில் அதிகாலை வேளையில் 50 காவல்துறையினரை 4 பேர் எப்படி தாக்க முடியும்? அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு விலங்கிடவில்லையா? ஹைதாராபாத்தில் நடந்த  என்கவுன்டர்கள் பெண்களின் பாதுகாப்பை எந்த வகையிலும் உறுதி செய்யாது.  இப்படியான போலி மோதல் சாவுகளை நடத்த கட்டளையிடும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. பாலியல் வழக்குகளில்  குற்றவியல் நடைமுறைச்சட்டம், விசாரணை, பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சாட்சிகள், நீதிமன்றங்கள், நீதிபதிகள் இவற்றைத் தாண்டி தான் நீதி பெற வேண்டியுள்ளது.பாலியல் ரீதியான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி மையங்கள் உதவுவதில்லை. சட்டத்திற்கு எதிராக பேசக்கூடியவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதன் மூலம் தான் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை மட்டுமின்றி மரியாதையும் பிறக்கும்’’ என்கிறார்.



Tags : encounter killings , Encounter killings, right to life, police
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100