×

மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது: இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்... முதல்வர் மம்தா பானர்ஜி அறிக்கை

மேற்குவங்கம்: மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள்.

எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி 5 நாட்களாக வன்முறை தலைவிரித்தாடியது. மே.வங்கத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவமும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன. இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தின் லாகோலா ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தின் போரடாங்கா, ஜாங்கிபுர், பாரக்கா ரயில்நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு தெற்கு பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்குவங்கத்தில் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் ஜெக்தீப் தங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். ரயில் மற்றும் பஸ்களுக்கு தீவைத்து பொது மக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Tags : West Bank ,No one ,Mamata Banerjee ,citizens , Citizenship Amendment Act, Violence, Chief Minister Mamta Banerjee
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...