×

15 நாட்களுக்கு பின்னர் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி

வி.கே.புரம், டிச. 14: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை கடந்த 16ம் தேதி முதல் பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக அளவு மழை பெய்துள்ளது. அதுவும் நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக மழை அதிக அளவு பெய்தது. இதனால் பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடந்த 28ம் தேதி முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் அதிகபட்சமாக 20 ஆயிரம் கன அடிநீர் வரை திறந்து விடப்பட்டதால் சொரிமுத்தய்யனார் கோயிலுக்கு செல்லும் பாலமும், முண்டந்துறை பாலமும் மூழ்கிய அளவு தண்ணீர் சென்றது. இதன்காரணமாக சொரிமுத்தய்யனார் கோயிலுக்கு செல்ல கடந்த 28ம் தேதி முதல் பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு 8ம் தேதி வரை வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் 9ம் தேதி மழை குறைந்து, வெள்ளமும் குறைந்ததால் அரசு பேருந்துகளில் காரையாறு சொரிமுத்தய்யனார் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். சொந்த வாகனங்களில் கோயிலுக்கு செல்ல கடந்த 10ம் தேதி முதல் அனுமதி வழங்கி வருகின்றனர்.அதுபோல் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 15 நாட்களாக குளிக்க தடை விதிக்கப் பட்டிருந்தது.தற்போது வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததால் நேற்று (13ம் தேதி) முதல் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதற்காக நேற்று முன்தினம் வனத்துறையினர் அருவி பகுதியில் வெள்ளத்தால் இழுத்து வரப்பட்ட மரக்கம்புகள் மற்றும் குப்பை கூளங்களை அகற்றியதோடு அங்கு சுற்றுலா பயணிகளை பயமுறுத்தி வந்த அனுமன் மந்திகளையும் கூண்டு வைத்து பிடித்து காரையாறு வனப்பகுதியில் விட்டனர். தடை விலக்கப்பட்டது குறித்து பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பு தெரிவிக்கப்படாததால் நேற்று கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.



Tags : Agastya Falls ,Aast ,Agastheri Falls , Agastya Falls, Bathing, Allowance
× RELATED நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியா்...