×

கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நாளை தொடக்கம் : 27 யானைகள் பங்கேற்பு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நாளை தொடங்க உள்ளது. தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கின்ற வகையில் கடந்த 2003ம் ஆண்டு முதல் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் நீலகிரி மாவட்டம் முதுமலையை அடுத்த தெப்பக்காட்டில் 4 ஆண்டுகள் நடத்தப்பட்டது. பின்னர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் 6 ஆண்டுகளாக  நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் 12வது ஆண்டாக யானைகள் புத்துணர்வு முகாம், நாளை தொடங்க உள்ளது. இந்த முகாமில் 27 யானைகள் பங்கேற்கின்றன. மேட்டுப்பாளையத்தில் துவங்க உள்ள யானைகள் புத்துணர்வு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம், வனபத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது. இதில் அறநிலைத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதனிடையே யானைகள் முகாமிற்காக கடந்த மாதம் 28ம் தேதி முதல் தேக்கம்பட்டியில் பல்வேறு முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் அனைத்தும் இன்று இரவுக்குள் முடிக்கப்படவுள்ளது.

மொத்தம் 6 ஏக்கர் நிலப்பரப்பில் யானைகள் முகாம், அலுவலகம், பாகன்கள் தங்குமிடம், பாகன்கள் ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கான கொட்டகைகள், குளியல் மேடை, ஷவர் மேடைகள் ஆகியவை அமைக்கப்படுகிறது. முகாமில் காட்டு யானைகள் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காக முகாமைச்சுற்றி கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 48 நாட்களுக்குபின் முகாம் நிறைவடைகிறது. வெளியூர்களில் இருந்து யானைகள் இன்று முகாம் நடக்கும் இடத்திற்கு கொண்டுவரப்படுகிறது. முகாமை பார்க்க, பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்.

Tags : Elephant Rejuvenation Camp ,Kovai Thekkampatti , Coimbatore, Thekkampatti, Elephants, Refreshment, Camp
× RELATED கோழிக்கமுத்தியில் யானைகள் புத்துணர்வு முகாம் நாளை நிறைவு