×

மார்த்தாண்டத்தில் 1.29 கோடியில் அமைக்கப்பட்டது அடிப்படை வசதி செய்யாத மீன்சந்தை கட்டிடம்: தணிக்கையில் முறைகேடு அம்பலம்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் மீன்சந்தை கட்டிடம் ஒதுக்கப்பட்ட நிதிக்கு  ஏற்றவகையில் கட்டப்பட வில்லை என்பதும், போதிய அடிப்படை வசதிகள் செய்ய வில்லை என்பதும் அதிகாரிகள் தணிக்கையில் தெரிய வந்துள்ளது. குழித்துறை  நகராட்சிக்கு உள்பட்ட மார்த்தாண்டம் சந்தை காந்தி மைதானத்தை ஒட்டி  அமைந்துள்ளது. இங்குள்ள மீன்சந்தையில் கடந்த 2018ம் ஆண்டு ₹1.29 கோடி செலவில் மீன்விற்பனைக்கு தனித்தனி கடைகள், மின்விளக்குள், தண்ணீர் வசதி, குளிர்சாத வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கபட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான பணிகள் நடந்து முடிவடைந்தன. தற்போது அந்த  கட்டிடத்தில் மீன்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கட்டிடத்தில் சுத்திரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர். மேலும் கட்டிடம் சரியாக பராமரிக்கப்படாததால்  கடும் சுகாதார சீர்கேட்டுடன் விளங்கி வருகிறது.

பொதுவாக ரூ.10  லட்சத்துக்கு ேமல் பணிகள் நடந்தால் நெல்லையில் உள்ள நகராட்சிகளின் மண்டல  இயக்குநர் அலுவலக அனுமதி பெற வேண்டும். அதன்படி உரிய அனுமதிபெற்று இந்த  கட்டிடம் கட்டப்பட்டது. இதன் தரம் குறித்து எம்.புக்கில் எழுதி  வைத்திருப்பர். இதை நகராட்சி ஓவர்சியர் பராமரிப்பது வழக்கம். ஆனால் இதனை முறையாக பராமரிக்க வில்லை என தெரிகிறது. இந்த  நிலையில் குழித்துறை நகராட்சியில் நடந்த பணிகள் குறித்து நேற்று முன்தினம் குமரிமாவட்ட தணிக்கை துறை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அதில் மார்த்தாண்டம் மீன்சந்தை கட்டிடம் கட்டியதில்  முறைகேடு நடந்துள்ளதாக ெதரியவந்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதிக்கு ஏற்றவகையில்  கட்டிடம் கட்டப்படவில்லை எனவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் தரமற்றவகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும்  தணிக்கை அதிகாரிகள் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இதுபோல பூங்கா  அமைக்கப்பட்டதிலும் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது.

மார்த்தாண்டம்  மீன் சந்தை கட்டிட வேலை நடந்தபோது ஆணையாளர், இன்ஜினியர் பணியிடங்கள்  காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொறுப்பு அதிகாரிகள் மட்டுமே  இருந்துள்ளனர். இந்த நிலையில் பணிகளை பொறுப்பெடுத்து செய்த அதிகாரி  முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று பொது மக்கள் கருத்து  தெரிவிக்கின்றனர். எனவே இதை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அதிகாரிகளை சரிகட்டும் முயற்சி
இது குறித்து முன்னாள் கவுன்சிலர் ஜாண்பிரிட்டோ கூறியதாவது: நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 10 வார்டுகள் குழித்துறை பகுதியிலும் 11 வார்டுகள் மார்த்தாண்டம் பகுதியிலும் உள்ளது. இங்கு முறையாக சொத்துவரி வரி வசூலிப்பாளர்கள் மூலம் வசூலிக்காததால் சுமார் 1 கோடி வரை சொத்துவரி பாக்கி உள்ளது. இது போன்று தொழில் வரி சுமார் ₹15 லட்சமும், தண்ணீர் வரி சுமார் 40 லட்சமும் வசூலாகமாமல் உள்ளது. வரிவசூலிப்பாளர்கள் முறையாக வசூலிக்காமல் உள்ளனர். இதை அதிகாரிகளும் கண்டு கொள்ள வில்லை. இதுபோன்று மார்த்தாண்டம் மார்க்கெட் நெருக்கடியிலும், சுகாதார சீர்கேடுகளிலும் சிக்கி உள்ளது.  மார்த்தாண்டம் மார்க்கெட்டில் காய்கறி சந்தை, வாழைத்தார், மீன்சந்தை போன்றவை தனித்தனியாக உள்ளது. கடந்த ஆண்டு 1.29 கோடியில் கட்டப்பட்ட மீன்சந்தை கட்டுமான பணியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தணிக்கை செய்த அதிகாரிகளும் நகராட்சி அலுவலர்களிடம் தங்கள் சந்தேகங்களை கேட்டுள்ளனர். இது நராட்சி அலுவலர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தற்போது அதிகாரிகளை சரிகட்டும் முயற்சியில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. மேலும் சந்தையை குத்தகையை எடுத்தவர்கள் சுத்தம் செய்யாமல் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. வெளிமாவட்டத்தில் இருந்து ஏராளமான மீன்கள் இங்கு கொண்டு வந்து சந்தையில் ஏலம் போடுவதால் அதில் உள்ள கழிவு நீர் சாலையில் ஓடி துர்நாற்றம் ஏற்படுத்துகிறது. மேலும் ஆடு, மாடு அறுக்கும் கூடத்தில் அரசமரம் விழுந்து கட்டிடம் சேதம் அடைந்துள்ளது.  மரத்தை வெட்டி அப்புறப்படுத்தாததால் கட்டிடம் மேலும் வலிவிழந்து வருகிறது. துப்புரவு பணியாளர்கள் போதிய கவனம் செலுத்தாததால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் சந்தைக்கு மக்கள் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : fish building ,building , Marthandam, Fish Market
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...