×

பிசான பருவ நெல் சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி

அம்பை: மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ நெல் சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடியில் 12 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் பூர்த்தி செய்கின்றன. வடகிழக்கு பருவமழை காலத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் மணிமுத்தாறு அணை நிரம்புவது வழக்கம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அனைத்து பகுதிகளில் போதிய அளவு பெய்த போதிலும் மணிமுத்தாறு அணை நிரம்பவில்லை. அதேபோல் நெல்லை மாவட்டம் அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, பாளையங்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட குளங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம்  தாலுகாவிற்குட்பட்ட 171 குளங்கள் முழுமையாக நிரம்பவில்லை. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 80 அடியை தாண்டினால் மட்டுமே  80 அடி கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் கடந்த டிச. 5ம் தேதி முதல் 100 அடி தண்ணீர் இருப்பில் உள்ளதால் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து 13ம் தேதி (நேற்று) முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அணையிலிருந்து அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சப்-கலெக்டர் பிரத்தீக்தயாள், அம்பை எம்எல்ஏ முருகையா பாண்டியன், நாங்குநேரி எம்எல்ஏ நாராயணன் ஆகியோர் முன்னிலையில் பிரதான கால்வாய் ரீச் 1, 2ல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறுகையில், ‘இந்த ஆண்டு சுழற்சி முறைப்படி 1வது மற்றும் 2வது ரீச்களில் பிசான பருவ நெல் சாகுபடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இன்று முதல் 2020 மார்ச் 31ம் தேதி வரை 110 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்திற்கேற்ப 1639 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் நெல்லை மாவட்டம் அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, பாளையங்கோட்டை தாலுகா மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகாவிற்குபட்ட 171 குளங்கள் மூலம் 11ஆயிரத்து 134 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.  விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்’ என்றனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சக்திவேல்முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அசோக்குமார், தாசில்தார் கந்தப்பன், ஐயப்பன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளர்கள் பழனிவேல், தங்கராஜன், உதவி பொறியாளர்கள் அரவிந்த்குமார், மகேஸ்வரன், வினோத்குமார், சுஸ்மி பென்சியா, வேளாண் உதவி இயக்குநர் கற்பகராஜ் குமார், டாக்டர் ரவீந்திரன், மின் பொறியாளர் ஷாஜகான், அணை சூபர்வைசர் காளிகுமார், அறிவழகன், மாரிமுத்து, கண்ணன், விஜயபாலாஜி, சங்கரலிங்கம், சுடலை, பிராங்கிளின், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுப்பணித்துறையினர் பலர் கலந்து கொண்டனர். நேற்று காலை நிலவரப்படி, 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு நீர்மட்டம் 107.55 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 489 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பெருங்கால்வாயில் தண்ணீர் வெளியேற்றம் இல்லை.

Tags : Opening ,Manimuthur Dam ,Pisan , Opening of water , Manimuthur dam
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்