நான் கேட்க மாட்டேன் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்...ராகுல் காந்தி ஆவேசம்

மக்களவையில் நடந்த அமளி மற்றும் ஒத்திவைப்புக்குப் பிறகு நாடாளுமன்றத்துக்கு வெளியே ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜ.வினர் வலியுறுத்துகின்றனர். ஆனால், நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க  மாட்டேன். ‘மேக் இன் இந்தியா’ பற்றி பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து வருவதால் இது, ‘ரேப் இன் இந்தியா’வாகி விட்டது  என்றுதான் நான் கூறினேன்.

முக்கிய பிரச்னை என்னவென்றால் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் வடகிழக்கு மாநிலங்களை எரித்து விட்டனர். அதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகத்தான், நான் கூறிய கருத்தை திரித்து கூறும்  உத்தியை கையாண்டுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மோடி, டெல்லியை பலாத்காரங்களின் தலைநகரம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதற்காக அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என்றார். மேலும், ராகுல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். வட கிழக்கு மாநிலங்களுக்கு தீ வைத்ததற்காக, நாட்டின் பொருளாதாரத்தை அழித்ததற்காக...,’ என்று கூறியுள்ளார். இதனுடன், ‘டெல்லி பலாத்காரங்களின் தலைநகரம்’ என்று காங்கிரஸ் ஆட்சியின்போது பிரதமர் மோடி பேசிய வீடியோ பதிவையும் அவர் இணைத்துள்ளார்.

Related Stories:

>