×

மொத்தமுள்ள 650 இடங்களில் 364ஐ பிடித்தார் இங்கிலாந்து தேர்தலில் போரிஸ் அமோக வெற்றி: பிரெக்சிட் முட்டுக்கட்டை நீங்கியதாக மகிழ்ச்சி

லண்டன்: இங்கிலாந்தில் நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான் பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ் கட்சி) அமோக வெற்றிப் பெற்றது. மொத்தமுள்ள 650 இடங்களில் அக்கட்சி 364 இடங்களை பிடித்தது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் பெருப்பான்மை ஆதரவு கிடைக்காததால், அதை நிறைவேற்ற முடியாமல் ஆளும் பழமைவாத கட்சி திணறி வந்தது. தெரசா மே பிரதமராக இருந்தபோது இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாததால், தனது பதவியை ராஜினாமா செய்தார். பிறகு, அவருக்கு பிறகு பிரதமரான போரிஸ் ஜான்சனும், கடந்த அக்டோபர் 31ம் தேதிக்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சித்தார். அவர் கொண்டு வந்த பிரெக்சிட் ஒப்பந்த தீர்மானங்களும், வடக்கு அயர்லாந்து எல்லை பிரச்னையை காரணம் காட்டி தோற்கடிக்கப்பட்டன. இதனால், அவர் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார்.

தேர்தலில் பெரும்பான்மை வெற்றி கிடைத்தால், அடுத்த மாதம் 31ம் தேதி விதிக்கப்பட்ட கெடுவுக்குள் பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவேன் என இங்கிலாந்து மக்களிடம் அவர் உறுதி அளித்தார்.  இதைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளில் இங்கிலாந்தில் 3வது முறையாக நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடந்தது. பழமைவாத கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இத்தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தம் 650 உறுப்பினர்கள் அடங்கிய பொதுச்சபையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சி 364 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. 1980க்குப் பிறகு இப்போதுதான் பழமைவாத கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (லேபர் கட்சி) 203 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குறித்து போரிஸ் அளித்த பேட்டியில், ‘‘இங்கிலாந்துக்கு புதிய விடியல் ஏற்பட்டுள்ளது. பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கான முட்டுக்கட்டை தகர்க்கப்பட்டு உள்ளது. பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்து மக்களிடம் 2வது கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்ற அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டியுள்ளோம்,’’ என்றார். தற்போது, இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தை சந்தித்து புதிய ஆட்சியை அமைக்கும் முயற்சியில் போரிஸ் ஈடுபட்டுள்ளார். அவர், கிறிஸ்துமசுக்குள் பிரெக்சிட்டை நிறைவேற்றுவார் என தெரிகிறது.

தொழிலாளர் கட்சி தோல்விக்கு காஷ்மீர் விவகாரம் ஒரு காரணம்
இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் தொழிலாளர் கட்சிக்கு பாரம்பரியமான தொடர்பு இருந்து வந்தது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையீடு வேண்டும் என தொழிலாளர் கட்சி அவசர தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவுக்கு எதிரான இந்த நிலைப்பாட்டால், இந்தியர்களின் ஆதரவையும் தொழிலாளர் கட்சி இழந்தது. இதுவும், பல இடங்களில் தொழிலாளர் கட்சி சந்தித்த தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இந்திய வம்சாவளிகள் அனைவரும் வெற்றி
இங்கிலாந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளிகள் அனைவருமே வெற்றி பெற்று அசத்தி உள்ளனர். கன்சர்வேடிங், லேபர் இரு கட்சியில் இருந்து 12 எம்பிக்கள் மீண்டும் அவரவர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் பிரித்தி படேல் குறிப்பிடத்தக்கவர். போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் முன்னாள் உள்துறை இணை அமைச்சரான இவருக்கு இம்முறையும் முக்கிய பதவி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனாக் உள்ளிட்டோர் மீண்டும் எம்பியாகி உள்ளனர். கன்சர்வேடிங் கட்சி சார்பில் ககன் மோஹிந்திரா, கிளாரி கோவ்டின்ஹோ மற்றும் லேபர் கட்சி சார்பில் நவேந்திரு மிஸ்ரா ஆகிய இந்திய வம்சாவளியினர் புதுமுக எம்பியாக வெற்றி பெற்றுள்ளனர். லேபர் கட்சி தோற்றாலும் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்தியர்கள் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

84 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த மிகப்பெரிய தோல்வி
இங்கிலாந்தில் பலம் வாய்ந்த கட்சியாக திகழும் தொழிலாளர் கட்சி, 1935ம் ஆண்டுக்குப் பிறகு சந்தித்துள்ள மிகப்பெரிய தோல்வி இதுதான். இத்தோல்வி குறித்து தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பைன் அளித்த பேட்டியில், ‘‘தேர்தல் முடிவு தொழிலாளர் கட்சிக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அடுத்த பொதுத்தேர்தல் பிரசாரத்தில் கட்சிக்கு நான் தலைமை தாங்க மாட்டேன்,’’ என்றார். தொழிலாளர் கட்சியின் கோட்டையாக இருந்த வடக்கு இங்கிலாந்து, மிட்லேண்ட்ஸ் மற்றும் வேல்ஸ் தொகுதிகளில் எல்லாம் பழமைவாத கட்சி வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதிகளில் மக்கள் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக கடந்த 2016ம் ஆண்டு வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொழிலாளர் கட்சி தலைவர் கோர்பைன் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, ‘பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக மக்களிடம் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,’ என வாக்குறுதிகள் அளித்தார். ஆனால், இதை இங்கிலாந்து மக்கள் விரும்பவில்லை என்பதை தேர்தல் முடிவு காட்டியுள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி டிவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘அபார வெற்றியுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்துக்கள். இந்தியா-இங்கிலாந்து இடையேயான நெருங்கிய உறவில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,’ என கூறியுள்ளார்.



Tags : win ,Boris ,UK ,election ,Glad , UK, Parliamentary Election, Prime Minister Boris Johnson
× RELATED மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான...