×

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை : ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சி.பி.ஐ.  விசாரணை கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய தேசிய மாணவர்கள் சங்கம், கேரளாவை சேர்ந்த முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், சென்னை ஐஐடியில் கடந்த 2006 முதல் கடந்த நவம்பர் வரை 14 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். எனவே, பாத்திமா லத்தீப் மரணம் உள்பட ஐஐடி வளாகத்தில் நடந்த மர்ம மரணங்கள் தொடர்பாக விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதில் ஒரு வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோரும் மற்றொரு வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோரும் தனித்தனியாக விசாரித்தனர். இந்த வழக்குகளின் தீர்ப்புகளை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். இரு தீர்ப்புகளிலும் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

வழக்கு விசாரணையில் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதை மனுதாரர்களும் எதிர்க்கவில்லை. மேலும், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக மனுதாரர் தரப்பில் போதிய ஆவணங்கள்தாக்கல் செய்யப்படவில்லை. அரிதிலும் அரிதான வழக்குகளை மட்டுமே சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட முடியும். அனுதாபத்தையும், உணர்ச்சியின் அடிப்படையிலும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. எனவே, இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அதேநேரம், மகளை பறிகொடுத்த பெற்றோரின் நிலையை உணர்ந்து, இந்த வழக்கின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜனவரி 21ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : IIT CBI ,death ,Fatima Latif ,Student Fatima Latif , IIT CBI inquiry , death , student Fatima Latif dismissed
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு