×

சென்னை மாநகராட்சியில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் 1,000 கோடி ஊழல் குறித்து விசாரித்து அமைச்சர் மீது நடவடிக்கை : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக அரசில், உள்ளாட்சி துறையின் ஊழல்கள், மக்கள் மன்றம் மூலம் நீதிமன்றம் வரை அணிவகுத்து நிற்கின்ற இந்த நேரத்தில், சென்னை மாநகராட்சியில், ஆற்று மணலுக்கு பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதில் 1000 கோடி அளவிற்கு ஊழல் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இத்துறையின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது, திமுக, அறப்போர் இயக்கம் சார்பில், 349 டெண்டர்கள் ஊழல் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, “48 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்” என்று தனியாகவே ஒரு காவல்துறை கண்காணிப்பாளரை நியமித்து, டிசம்பர்- 18ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதைபற்றி சிறிதும் கவலைப்படாமல், “மழை நீர் கால்வாய், நடைபாதை அமைக்கும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களில் சென்னை மாநகராட்சியில் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்படுகிறது. ஆனால் பயன்படுத்தப்படுவதோ எம்-சாண்ட்” என்று, அண்மையில், சென்னையில் உள்ள ‘ஹார்லிஸ் ரோடு’ நடைபாதையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆற்றுமணலை விட எம்-சாண்ட் நூற்றுக்கு ஐம்பது சதவீதம் விலை குறைவு என்ற நிலையில், கான்கிரீட் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகையின் சந்தை விலை 25 முதல் 30 சதவீதம் ஒப்பந்தங்களில் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதிலும் ஊழல் என்று செய்திகள் வெளிவருகின்றன. அனைத்து மாநகராட்சிகளிலும், 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட ‘‘திடீர் சோதனை’’ எத்தனை? எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன? அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை ஒரு ‘‘விஜிலென்ஸ் ரிப்போர்ட்டாவது’’ லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தானாக முன்வந்து விசாரித்து போட்டிருக்கிறதா? உள்ளாட்சி நிர்வாகத்தை, ‘‘ஊழல் நாறும் நிர்வாகமாக’’ மாற்றியிருக்கும் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சரின் வலது, இடது கரமாக திகழ்பவர் என்பது அனைவரும் அறிந்ததே.

அதனால்தான் அவருக்கு எதிரான ஊழல் விசாரணைகளை, திட்டமிட்டு கிடப்பில் போடுவதோடு மட்டுமின்றி, அவர் விரும்பும் ஊழல்களுக்கு எல்லாம் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் ‘கைகட்டி’ நின்று ‘கப்பம்’’ வசூல் செய்யும் பணி செய்து வருகிறார்கள். அமைச்சர் வேலுமணி மட்டுமல்ல; இதற்கு துணை போகும் ஐஏஎஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும். ஆகவே, சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள இந்த, ‘ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட்’ என்ற 1000 கோடி ஊழல் குறித்து, உடனடியாக உரிய விசாரணை நடத்தி அமைச்சரையும், அவருக்கு துணை போகும் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளையும் விரைவில் குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கு லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : minister ,corporation ,Chennai , M-SAND, use corporation , Chennai
× RELATED 24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி...