அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து: கவுகாத்தி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இந்தியாவில் மேற்கொள்ள இருந்த 3 நாள் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கவுகாத்தியில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இந்தியாவில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய இருந்தார். இதற்காக நாளை அவர் டெல்லி வர இருந்தார். ஆனால், அசாம் போராட்டம் காரணமாக, பாதுகாப்பு கருதி அவருடைய இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

அபேயின் இந்திய பயணத்தின்போது, கவுகாத்தியில் இந்தியா - ஜப்பான் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இங்கு போராட்டம் காரணமாக பதற்றம் நிலவுவதால், இந்த  பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகமும் நேற்று தெரிவித்தது. இத்துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக வருகை தர இருந்தார். அப்போது, பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்திருந்தார். தற்போது, ஜப்பான் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>