×

பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை: தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்

புதுடெல்லி: பொருளாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறினார்.  கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறியதாவது:  நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக  நுகர்வை அதிகரிக்க செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். நிதி சீர்திருத்த நடவடிக்கைகள் பலன்தர தொடங்கியுள்ளன. 3,500 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இதுபோல் ரியல் எஸ்டேட் துறை திட்டங்களுக்காக பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூலதன நிதி வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் கடன்கள் வழங்குவதற்காக, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு ₹4.47 லட்சம் கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. கடன் உறுதி திட்டத்துக்காக 7,657 கோடி வழங்க 17 திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மூலதன நிதியாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ₹3.38 லட்சம் கோடியில் 66 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது என்றார்.

ஜிஎஸ்டி உயருமா? நிதியமைச்சர் பதில்
வரி வருவாய் குறைந்ததால் ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, அடிப்படை வட்டி விகிதமான 5 சதவீதத்தை 6 சதவீதமாக உயர்த்துவது எனவும், பல பொருட்களுக்கு வரி உயரும் எனவும் மத்திய அரசு வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிர்க்கட்சிகள், தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கேட்டபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி உயர்த்தப்படுகிறது என எனது அலுவலகத்தை தவிர எல்லா இடத்திலும் பேசிக்கொள்கிறார்கள்’’ என்றார். ஆனால் உயர்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.    வெங்காயம் விலையை கட்டுப்படுத்துவது குறித்து கேட்டதற்கு, ‘‘வெங்காயம் விரைவாக அழுகக்கூடியது. சில பகுதிகளில் மழை, வெள்ளம் காரணமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் விலை உயர்ந்துள்ளது என்றார்.

Tags : Economics, Chief Economic Advisor
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...