×

கொடுங்கையூரில் அதிகாலை பரபரப்பு,..ரசாயன குடோனில் தீ விபத்து: கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் தவிப்பு

சென்னை: கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, ஜிஎன்டி சாலையில் சுரேஷ் கட்டாரி, உமேஷ் ஆகியோருக்கு சொந்தமான ரசாயன குடோன் உள்ளது. இங்கு, ஸ்டீல் பாத்திரங்களை பாலீஷ் செய்யும் சோப் மற்றும் சலவை சோப், கிளீனிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளிமாநிலங்களில் உள்ள கம்பெனிகளுக்கு ரசாயனம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் இந்த குடோனில் தீவிபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், செம்பியம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். முடியாததால், வியாசர்பாடி, மாதவரம், எழும்பூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் 6 டேங்கர் லாரிகளில் தண்ணீர் வரவழைக்கப்பட்டு பீய்ச்சியடிக்கப்பட்டது.

அதற்குள் குடோனில் இருந்த ரசாயனம் வெடித்து சிதறியதில் சாலையில் ரசாயனம் பரவியது. அப்பகுதி புகைமண்டலமாக மாறியதால் எருக்கஞ்சேரி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு கண் எரிச்சலும், சுவாச கோளாறும் ஏற்பட்டது. இருப்பினும், சுதாரித்துக்கொண்ட தீயணைப்பு வீரர்கள் போராடி ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதன்பிறகு சாலையில் ஓடிய ரசாயன கழிவை 5 மணி நேர போராட்டத்திற்கு அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி கூறுகையில், “குடோனில் ஹைட்ரஜன், பெராக்சைடு அசிட்டிக் ஆசிட் இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தில் தீ பரவக்கூடாது என்பதற்காக முதலில் ரசாயனங்களின் தீவிரத்தை குறைக்க அதிகளவு தண்ணீர் பீய்ச்சியடித்தோம். பிறகு படிப்படியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. உரிய நேரத்தில் தீயணைப்புத்துறை வீரர்கள் வந்ததால் மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பெரிய, பெரிய ஷாப்பிங் மால், கடை உள்ளிட்ட இடங்களில் தீயை அணைக்கக்கூடிய கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன. ஆனால், குடோன்களில் இதுபோன்ற வசதியில்லை. குடோன்களிலும் தீ அணைப்பதற்கான வசதிகளை உரிமையாளர்கள் செய்யவேண்டும்” என்றார்.


Tags : fire ,Kodungaiyur , Kodungaiyur, chemical kudon, fire, eye irritation
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா