×

நங்கநல்லூரில் உள்ள கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆசாமியிடம் விசாரணை

ஆலந்தூர்: நங்கநல்லூரில் உள்ள 2 கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலுக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், ‘‘அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டினால் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மூலமாக கோயிலை இடிப்பேன்’’ என்று எழுதப்பட்டு இருந்தது.இந்த கடிதத்தை படித்த கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இந்த கடிதத்தினை பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கும்படி  புகார் செய்தனர்.  போலீசார் விசாரணையில், மிரட்டல் கடிதம் அனுப்பியவர் சைதாப்பேட்டையை சேர்ந்த நபர் என்று தெரியவந்தது.

இதனையடுத்து அவரை காவல் நிலையம் கொண்டு வந்து  விசாரணை நடத்தியபோது,  இதேபோல் மைலாப்பூர் கோயிலுக்கும் இவர் மிரட்டல் கடிதம் அனுப்பியதாக மயிலாப்பூர் போலீசார் இவரை அழைத்து விசாரித்தது தெரிந்தது. அப்போது இவர், தனக்கும் அந்த கடிதத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.  என்னை சிக்கவைக்க யாரோ இதுபோல் கடிதம் எழுதி உள்ளனர்.  நான் இதுபற்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்துள்ளேன், என தெரிவித்து இருந்தார். இதனால், இந்த நபர் தான் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பி விட்டு நாடகமாடுகிறாரா? அல்லது இவரது பெயரில் வேறு யாரேனும் தொடர்ந்து மிரட்டல் கடிதம் அனுப்புகின்றனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கும் சைதாப்பேட்டை நபர் பெயரில் மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : temples ,Investigation ,Asami Nanganallur ,Asami , Nanganallur, Temples, Bomb Threat
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...