×

தனியாருக்கு தாசில்தார் தாரைவார்த்த 20 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: மாநகராட்சி நடவடிக்கை

அண்ணாநகர்: அமைந்தகரையில் தனியாருக்கு தாசில்தார் தாரைவார்த்த 20 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 30 சென்ட் காலி இடம் உள்ளது. இந்த இடத்தை அமைந்தகரையை சேர்ந்த ஒருவர் கடந்த ஜூன் மாதம் தனது பெயரில் பட்டா மாற்றம் செய்ததாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் விசாரணையில், மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை, தனியார் ஒருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு தாசில்தார் பட்டா பெயர் மாற்றம் செய்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி அதிகாரிகள் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷிடம் தெரிவித்தனர். அவர், மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தார்.

 இதையடுத்து, அந்த இடத்தை மீட்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில், அமைந்தகரை போலீசார் உதவியுடன் நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, அரசு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, 30 சென்ட் நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ₹20 கோடி. பின்னர் அங்கு ‘இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்’ என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தனியாரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : state land ,land ,Corporation , Dasildar, State Land Reclamation, Corporation
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!