×

பாரிமுனை, திருவொற்றியூர் பகுதிகளில் சாலையில் நிறுத்தப்படும் பறிமுதல் வாகனங்கள்: போக்குவரத்துக்கு இடையூறு

தண்டையார்பேட்டை: மத்திய அரசு சமீபத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தின் கீழ், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு 10 ஆயிரம் அபராதமும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக பல்வேறு பகுதிகளில் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக பாரிமுனை, தங்கசாலை, திருவொற்றியூர், பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், தி.நகர், தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளன.

 இருசக்கர வாகனங்கள் வைத்திருக்கும் 95 சதவீதம் பேர் அதனை மாத தவணையில் வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில், இதுபோன்று அதிகளவில் அபராதம் விதிக்கப்படுவதால், அதனை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். பழைய இருசக்கர வாகனங்களின் சந்தை மதிப்பை விட அபராத தொகை அதிகமாக இருப்பதால் பலர் இருசக்கர வாகனங்களை போலீசாரிடமே விட்டு செல்கின்றனர்.  இதன் காரணமாக பறிமுதல் வாகனங்களின் குவியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தேவையில்லாத வாகனங்கள் நிறுத்த கூடாது என்ற உயர் அதிகாரிகளின் உத்தரவால் காவல்நிலையத்தில் நிறுத்த முடியாமல், பறிமுதல் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

திருவொற்றியூர், பாரிமுனை பகுதிகளில் ஏற்கனவே நெரிசல் உள்ள நிலையில், தற்போது பறிமுதல் வாகனங்களால் மேலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பல முக்கிய சாலைகளில் தினசரி காலை, மாலை நேரங்களில் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பறிமுதல் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Tags : road ,Thiruvottiyur ,Barimunai ,Parimunai , Barimunai, Tiruvottiyur, confiscated, vehicles, transport
× RELATED 2,517 வாகனங்கள் பறிமுதல்