×

ஆக்ரமிப்பு கோயிலை இடிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு: 3வது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

தோகைமலை: தோகைமலை அருகே ஆக்ரமிப்பு கோயிலை இடிக்க பொக்லைன் எந்திரம், அதிரடிப்படையுடன்  போலீசார் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நாள் அவகாசம் கொடுத்தார். கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த முதலைப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குளக்கரையில் செல்லாயிஅம்மன் கோயில் உள்ளது.  முதலைபட்டி ஊராட்சியில் உள்ள கீழமேடு, பாரதிநகர், காவல்நகர், கவுண்டம்பட்டி, வீரமலைகவுண்டம்பட்டி, திருமுடிதோட்டம், பாளையத்தான்தோட்டம், வெள்ளக்கல்மேடு மற்றும் மேலமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்  இந்த கோயிலை தங்கள்  காவல் தெய்வமாக  வணங்கி வருகிறார்கள். இந்த கோயிலுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து கடந்த 29.5.2019 அன்று கும்பாபிஷேகம் செய்தனர்.

நீராதாரங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்றும்படி ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் முதலைபட்டி குளத்தில் ஸ்ரீசெல்லாயிஅம்மன் கோவில் உள்ளதாகவும்,  அது நீராதாரத்தை ஆக்ரமித்து  குளம் உள்ளதால் கோயில் கருவரையை தவிர அனைத்தையும் ஐகோர்ட் உத்தரவுப்படி அகற்ற  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஊர் மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலைபட்டி கிராம மக்களை அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.  இந்த கூட்டத்தில்  செல்லாயிஅம்மன் கோவில் முன் உள்ள மண்டபம் மற்றும் பரிவார கோவில்களை அகற்றும்படி கேட்டுக்கொண்டனர். இதற்கு பொதுமக்கள் உடன்படவில்லை. இதனையடுத்து மதுரை உயர்நீதி மன்ற உத்தரவின் காலக்கெடு கடந்த மாதம் 25ம் தேதி முடிவடைந்ததால் கடந்த மாதம் 29ம் தேதி குளித்தலை சப்கலெக்டர் சேக்அப்துல்ரகுமான், குளித்தலை தாசில்தார் மகாமுனி, தோகைமலை ஒன்றிய ஆணையர் ராணி ஆகியோர் செல்லாயிஅம்மன் கோவிலை ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முதலைபட்டி கிராம மக்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார்அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க முதலைபட்டி விஏஓ அலுவலகம் முன்  அமர்ந்து போராட்டம் செய்தனர்.
அதன்பின்பு பொதுமக்கள் அனைவரும் செல்லாயிஅம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.  அவர்கள் கோயிலில் சமைத்து சாப்பிட்டு நேற்று  2ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இன்று 3ம் நாளாக அப்பகுதியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த வந்த கலெக்டர் அன்பழகன், எஸ்.பி.பாண்டியராஜன் மற்றும்  500க்கும் மேற்பட்ட அதிவிரைவு படையினர்  வஜ்ரா வாகனத்துடன்  கோயிலை இடிக்க வந்தனர். அப்போது அப்பகுதி மக்கள், முதலைபட்டியில் உள்ள செல்லாயிஅம்மன் கோயில் 8 பட்டி கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக 100 ஆண்டுகளுக்கு மேல்உள்ளது  இ்ந்த  கோயிலை இடிக்கக்கூடாது என்றும், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளதால் இன்று ஒரு நாள் காலஅவகாசம் வேண்டும்  என்று தெரிவித்தனர். பொதுமக்களுக்கு ஆதரவாக எம்எல்ஏ ராமர், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், அதிமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகர்  அங்கு வந்திருந்தனர்.

பின்னா் கலெக்டர் அன்பழகன் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுபடி கோயிலை இடிக்க வேண்டியுள்ளது. இன்று ஒரு நாள் அவகாசம் தருகிறோம் என்று கூறிவிட்டு  சென்றார். ஆனாலும் பொதுமக்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த முதலைப்பட்டி கிராமத்தில் தான் ஆக்ரமிப்பு குறித்து புகார் செய்த சமூக ஆர்வலர் வீரமலை அவரது மகன் நல்லதம்பி ஆகியோர் கடந்த ஜூன் மாதம்  வெட்டி கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : District administration , struggle
× RELATED ஊட்டி மகளிர் தின விழாவில் நடனமாடிய கலெக்டர், டிஆர்ஓ