×

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு பஸ்சில் செல்ல இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு பஸ்களில் செல்வதற்கு இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை தொடர் விடுமுறையின் போது, பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக சென்னையில் கூட்டம் அதிகமாக இருக்கும். காரணம் இங்கு வேலை, படிப்பு, தொழில் நிமித்தமாக ஏராளமானோர் தங்கியுள்ளனர்.

இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் நிரந்தரமாக இயக்கப்படும் பஸ்களுடன்  கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதன்படி வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி போகிப்பண்டிகை, 15ம் தேதி பொங்கல், 16ம் தேதி திருவள்ளுவர் தினம், 17ம் தேதி உழவர் தினம் வருகிறது. அதற்கு அடுத்த இரு நாட்களும் சனி, ஞாயிறாகவுள்ளது. எனவே பலரும் 13ம் தேதி இரவோ, அதற்கு முன்பாகவோ சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். மீண்டும் 19ம் தேதி திரும்புவார்கள். இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் நடப்பாண்டிலும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுக்கூட்டம் இம்மாதத்தின் கடைசியில் நடத்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இக்கூட்டத்தின் போது, எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்?, தற்காலிக பேருந்து நிலையங்கள் எங்கு அமைக்க வேண்டும்?, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள், பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகளின் வசதி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அப்போது எத்தனை சிறப்பு பஸ்கள் இயக்கலாம் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இந்நிலையில் தற்போது இயக்கப்பட்டு வரும் அரசு விரைவுப் பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. எனவே, பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர், இந்த வசதியைப் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதனால் தென் மாவட்ட மக்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 10ம் தேதிக் ஊருக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதேபோல் ஜனவரி 11ம் தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

ஜனவரி 13ம் தேதிக்கான முன்பதிவு வரும் 15ம் தேதியும், ஜனவரி 14ம் தேதிக்கான முன்பதிவு வரும் 16ம் தேதி திங்கள்கிழமையும் தொடங்குகிறது. நேற்று தொடங்கிய முன்பதிவு  சில நிமிடங்களிலேயே தென் மாவட்ட ரயில்களுக்கான டிக்கெட்டுகள் காலியாகி விட்டன. இதனால் டிக்கெட் கவுண்டர்களில் காத்துக் கிடந்த தென் மாவட்ட பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.


Tags : hometown ,festival , Pongal, Reservation, Bus
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...