×

குமரியில் 5 மாதமாக முடங்கிய நிலையில் மீண்டும் தொடங்கியது உப்பளத்தொழில்

தென்தாமரைகுளம்: குமரியில் மழை காரணமாக கடந்த 5 மாதமாக முடங்கி கிடந்த உப்பளத் தொழில் மீண்டும் புத்துயிர் பெற்று உள்ளது. இதையடுத்து உப்பு விளைவிப்பதற்கான பாத்தி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தென்தாமரைகுளம் அருகே சாமிதோப்பு, சாஸ்தான்கோயில்விளை, காமராஜபுரம், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, ஆண்டிவிளை, சித்தன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்கள் அதிகமாக உள்ளன. இந்த தொழிலை நம்பி சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் உப்பு விளைவிக்கப்படுகிறது. கன மழை காரணமாக கடந்த 5 மாதங்களாக வயல்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நின்றது.

இதனால் உப்பளத் தொழில் முடங்கியது. தொழிலாளர்களும் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். தற்போது மழை ஓய்ந்து உள்ளது. இந்த நிலையில் உப்பள வயல்களில் தேங்கிய தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கியது. கடந்த 2 மாதங்களாக இந்த பணிகள் இரவு பகலாக நடந்து வந்தன. தற்போது தேங்கிய மழை தண்ணீர் முழுவதும் அகற்றப்பட்டு விட்டது.

இதையடுத்து 400 ஏக்கரில் உப்பு விளைவிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அருகில் உள்ள கடல் நீரை தேக்கி வைப்பதற்காக உப்பள வயல்களில் பாத்திகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழை காரணமாக கடந்த 5 மாதமாக குமரியில் முடங்கிய உப்பளத் தொழில் மீண்டும் புத்துயிர் பெற தொடங்கி வருவது தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Tags : Kumari , Salt industry
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...