×

குலோப் ஜாமூனில் பல்லி அதிகாரிகள் விசாரணை: கோவையில் பரபரப்பு

கோவை: கோவையில் உள்ள ஒரு பேக்கரியில் வாங்கிய குலோப் ஜாமூனில் இறந்த பல்லி கிடந்தது. இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமதுரஷீத். இவர், கடந்த 7ம் தேதி இரவு உக்கடம் பஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு பேக்கரியில் குலோப் ஜாமூன் வாங்கினார். அதை அன்று இரவே வீட்டிற்கு சென்று சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி, வாந்தி- பேதி ஏற்பட்டது. உடனடியாக, அருகேயுள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது, ‘புட் பாய்சன்’ ஏற்பட்டுள்ளதாக டாக்டர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அவர் குலோப் ஜாமூன் இருந்த பாக்சை திறந்து பார்த்தபோது, அதில் ஒரு பல்லி, வால் அறுந்த நிலையில் இறந்து கிடந்தது. அதிர்ச்சிடைந்த ரஷீத் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு குலோப் ஜாமூனை கொண்டு சென்று புகார் அளித்துள்ளார்.

அவர்கள் முறையாக பதிலளிக்காததால், இதுகுறித்து முகமது ரஷீத் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் செய்தார். அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று விசாரணை நடத்தி, பரிசோதனைக்காக அங்கிருந்த குலோப்ஜாமூன் மற்றும் இனிப்பு பொருட்களை எடுத்து சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் கூறுகையில், ‘‘குலோப் ஜாமூனில் பல்லி இறந்து கிடந்தது தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் புகார் வந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேக்கரியில் ஆய்வுசெய்து மாதிரிகளை சேகரித்துள்ளனர். இது ஆய்வுக்கு அனுப்பப்படும். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் உணவு பொருட்கள் குறித்த புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம். புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை குறித்து புகார் அளித்தவருக்கு தெரிவிக்கப்படும். புகார் அளிப்பவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியம் காக்கப்படும்’’ என்றார்.

Tags : Lizard Investigation ,Gulop Jamun ,Tense In Goa , Lizard
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...