×

திருவண்ணாமலையில் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை- செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி தொடங்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகாலம் ஆகிறது. மிகவும் பழமை வாய்ந்த இக்கல்லூரியில் படித்தவர்கள் எம்எல்ஏவும், அரசு அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள்.


இக்கல்லூரியில் ஆரம்பத்தில் சுமார் 1000 மாணவ- மாணவிகளே படித்து வந்தனர். நாளடைவில் இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சுமார் 6 ஆயிரம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.


இங்கு காலை, மாலை என இரண்டு ஷிப்டுகளாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இக்கல்லூரிக்கு பெரும்பாலான மாணவ- மாணவிகள் பஸ்களிலேயே வந்து செல்கிறார்கள். உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவிகள் சிலர் சைக்கிளிலிலும், நடந்தும் கல்லூரிக்கு வருகின்றனர். இவ்வாறு கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவ- மாணவிகளுக்கு போதுமான பஸ் வசதி இல்லாததாலும், குறித்த நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததாலும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

மேலும் கல்லூரி முடிவடைந்த பிறகு தங்களது வீட்டுக்கு செல்வதற்கு பஸ் வசதி போதுமான அளவு இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். கல்லூரி முடிந்ததும் தங்களுடைய ஊர்களுக்கு செல்ல செங்கம், பெங்களூரு மார்க்கமாக இருந்து வரும் பஸ்களிலேயே அவர்கள் செல்ல வேண்டியது உள்ளது. அவ்வாறு வரும் பஸ்களில் ஏற்கனவே பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலில் மாணவ- மாணவிகள் முண்டியடித்து ஏறி செல்கிறார்கள். பஸ்களில் நிற்க கூட இடம் இல்லாத பட்சத்தில் ஆபத்தை உணராமல் பஸ்களில் தொங்கி கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு மாணவ- மாணவிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.

இதனால் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. கூடுதல் பஸ் வசதி கேட்டு பலதடவை முறையிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் செங்கம், பெங்களூரு மார்க்கமாக வரும் அரசு ரூட் பஸ்கள் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பெரும்பாலும் நிற்பதில்லை. டவுன் பஸ்கள் மட்டுமே நிற்கின்றன. அவ்வாறு நிற்கும் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கென பிரத்யேகமாக டவுன் பஸ்கள் இயக்கப்படுவதைபோல், மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு கலைக்கல்லூரிக்கென கூடுதலாக டவுன் பஸ்களை கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும் நேரத்திலும், கல்லூரி வகுப்புகள் முடிவடையும் நேரத்திலும் இயக்க வேண்டும் என்பதே மாணவ- மாணவிகளின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Tiruvannamalai Students ,Thiruvannamalai , Students ,Tiruvannamalai ,footboard ,danger
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...