×

தொடர் மழையால் விவசாயிகள் கவலை சின்னவெங்காயம், சிறுகிழங்கு அழுகியது

மானூர் : நெல்லை மாவட்டம் மானூர் தாலுகாவில் களக்குடி, பள்ளமடை, பிராஞ்சேரி, போன்ற பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் பயிரிடப்பட்ட சின்னவெங்காயத்தை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். தற்போது சின்னவெங்காயம் விலை கிலோ ரூ.160 வரை விற்கும் நிலையில், அறுவடை செய்யும் நிலையில் அழுகி வருவதால் விவசாயிகள் பலனை அனுபவிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் செலவு செய்த பணத்தை கூட பெற முடியாமல் கவலை அடைந்துள்ளனர். மழை காலங்களில் வெங்காயத்தை சேமிக்க இந்த பகுதியில் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து களக்குடியை சேர்ந்த விவசாயிகள் மணி,  சங்கரலிங்கம், கோபால், தங்கராஜ் ராஜகோபால், சுப்பையா சுடலைமுத்து உள்ளிட்டோர் கூறுகையில், மானூர் வட்டாரத்தில் பள்ளமடை, பிராஞ்சேரி, பிள்ளையார்குளம், கானார்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. நடப்பாண்டில் புரட்டாசியில் பயிர் செய்து ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். நன்கு விளைந்தால் ஏக்கருக்கு 6 ஆயிரம் கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு விளைந்தால் கிலோ ரூ.35க்கு விற்பனை செய்தாலே போதும்.

எனினும் இந்தாண்டு பெய்த மழையின் தீவிரத்தால் பலன் தரக்கூடிய நேரத்தில் வெங்காய வயலில் மழைநீர் தேங்கியது. இதனால் பயிர்கள் அழுகும் நிலைக்கு சென்றுவிட்டன. தற்போது பெரும்பாலான பயிர்கள் முழுமையான விளைச்சல் இன்றியும், சில இடங்களில் அழுகியும் காணப்படுகின்றன. இதனால் பெரும் நஷ்டமே ஏற்படும்.மானூர் தாலூகாவில் வெங்காயத்துக்கு காப்பீடு வழங்கப்படவில்லை. இதுகுறித்து தோட்டக்கலை துறையை அணுகினாலும் குறைந்தபட்சம் 20 எக்டேர் பயிர் செய்ய வேண்டுமென கூறுகின்றனர். எங்கள் பகுதியில் சர்வே செய்தால் அதற்கு அதிகமாகவே பயிர் செய்யப்பட்டிருக்கும். காப்பீடு வழங்கப்படாததால் இழப்பீடு தொகை கிடைக்காது.

நடப்பாண்டில் வெங்காயம் விலை உயர்ந்திருந்தாலும் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. வழக்கமாக பயிர் செய்யும் வெங்காயத்தை பாதுகாக்க மானூர் வட்டாரத்தில் அரசு வெங்காய  சேமிப்பு கிடங்கு அமைத்து தர வேண்டும். இப்பகுதியில் தோட்டக்கலைத்துறை பயிர் காப்பீடு செய்ய முன்வர வேண்டும் என்றனர். இதேபோல் கடையம் அருகே கீழாம்பூர், மஞ்சப்புளி காலனி பகுதியில் விவசாயிகள் சுமார் 100 ஏக்கரில் சிறுகிழங்கு பயிரிட்டிருந்தனர். இந்த பகுதியில் தொடர்ந்து நீடித்து வரும் வடகிழக்கு பருவமழையால் சிறுகிழங்கு வயல்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கியது. அறுவடை நிலையில், தண்ணீர் சூழ்ந்ததால் கிழங்குகள் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வெள்ளநீரை வடிய வைக்க முடியாததால், மஞ்சப்புளி காலனி பகுதியில் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில் சிறுகிழங்கு அழுகி உள்ளது.

இதுகுறித்து விவசாயி கண்ணன் கூறுகையில், ‘ஜூலை மாதத்தில் பெய்த மழையையடுத்து சிறுகிழங்கு பயிரிட்டோம். ஏக்கருக்கு சுமார் 50 ஆயிரம் வரை செலவான நிலையில் கிழங்கு எடுக்கும் காலத்தில் மழை அதிகம் பெய்ததால் கிழங்குகள் அழுகி நாசமாகின. கடந்த 3 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாத நிலையில் இந்த ஆண்டு சிறுகிழங்கு பயிரிட்டு அவையும் அழுகியதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இதற்கு உரிய இழப்பு வழங்க வேண்டும்’ என்றார்.

Tags : maanur , maanur,nellai,Small Onion,Small tuber ,spoiled
× RELATED கடலூர் அருகே பேரூராட்சி அலுவலகத்தில்...