×

மாமூல் கொடுக்கவே கூடுதல் விலைக்கு விற்பனை டாஸ்மாக் நிர்வாக சீர்கேட்டிற்கு அமைச்சர்தான் காரணம்

* ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

ஈரோடு: டாஸ்மாக் நிர்வாக சீர்கேட்டிற்கு அந்த துறையின் அமைச்சர் தங்கமணிதான் காரணம் என டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் திருச்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் திருச்செல்வம்  ஈரோட்டில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகம் முழுவதும் 5,200 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சூப்பர்வைசர், விற்பனையாளர் என 26 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு எந்த பணி பாதுகாப்பும், விடுமுறையும் கிடையாது.  ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி தரும் டாஸ்மாக் கடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் அரசு அக்கறை காட்டுவதில்லை. கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.

பீர் வகைகளை வைக்க 2,500 கடைகளுக்கு பிரிட்ஜ் வழங்கி உள்ளார்கள். மீதமுள்ள கடைகளில் ஊழியர்களே பிரிட்ஜ் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். கூடுதல் செலவு ஏற்படுவதால்தான் 5 ரூபாய், 10 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. மேலும், அதிகாரிகளுக்கு மாதந்தோறும் மாமூல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். தமிழகம் முழுவதும் 3,300 டாஸ்மாக் பார்களை அரசு அனுமதியின்றி ஆளும் கட்சியினர் சட்டவிரோதமாக நடத்தி வருகிறார்கள். இதன்மூலம், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

டாஸ்மாக் துறைக்கு அதிகாரியாக வருபவர்கள் ரூ.25 லட்சம் கொடுத்துதான் பதவிக்கு வருகிறார்கள். இதனால், 50 லட்சம், ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். டாஸ்மாக் நிர்வாகம் சீர்கேடு அடைந்ததற்கு துறையின் அமைச்சர் தங்கமணிதான் காரணம் என நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஜனவரி 8ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் எங்களின் கோரிக்கைகளையும் வலியுறுத்தி கலந்து கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Mamul ,minister , extra cost, minister's task, managing the sales task
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...