×

பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் வெற்றி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சென்னை: பி.எஸ்.எல்.வி- சி48 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் ஆய்வு போன்றவற்றிற்காக 50வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் இஸ்ரோ விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்ட நிகழ்வு, இந்திய திருநாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளனர்.

பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரது முயற்சியும், உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. இந்த சாதனை இளைய தலைமுறையினரை உற்சாகப்படுத்தி, அவர்களை விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கும். இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பற்பல சாதனைகள் படைத்து, நம் தாய்திருநாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்திட இத்தருணத்தில் என் சார்பாகவும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : PSLV ,rocket win ,scientists ,ISRO , PSLV-C48, rocket win ,congratulates, ISRO scientists
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு