ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நாளையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 27 மற்றும் 30ம் தேதி 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நடந்து வருகிறது.

இதற்கிடையே, சனிக்கிழமையான நாளையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 16ம் தேதி கடைசி நாள் ஆகும். நாளை சனிக்கிழமை பொது விடுமுறை நாள் இல்லை என்பதால் தேர்தல் நடத்தும் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>