×

மத்திய அரசு புதிய சர்ச்சை பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்ற சர்ச்சைகளுக்கு இடையே, பாஸ்போர்ட்டில் தாமரையை அச்சிட்டு மத்திய அரசு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்ற பல்வேறு கொள்கைகளை மத்திய பாஜ அரசு அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சர்ச்சைகளின் வரிசையில், பாஸ்போர்ட்டில் தாமரை சின்னத்தை அச்சிட்டு மத்திய அரசு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மக்களவையில் நேற்று முன்தினம் நடந்த கேள்வி நேரத்தில் இந்த பிரச்னையை கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி.யான ராகவன் முதன் முதலாக கிளப்பி இருக்கிறார். கேள்வி நேரத்தில் அவர் பேசியபோது, ‘கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் புதிதாக வினியோகிக்கப்பட இருக்கும் பாஸ்போர்ட்டில் தாமரை முத்திரை இடம் பெற்றுள்ளது.

இது குறித்து பத்திரிகைளில் செய்தி வெளியாகி இருக்–்கிறது. புதிய பாஸ்போர்ட்டில் பாஜ.வின் தேர்தல் சின்னமான தாமரை இடம் பெறுவது ஏன்? இது, நாட்டை காவி மயமாக்கும் பாஜ.வின் முயற்சியா?’ என கேட்டார். பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் இடம் பெற்றுள்ள விவகாரம், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று விளக்கம் அளித்தார். டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘புதிய பாஸ்போர்ட்டில் பாதுகாப்பு அம்சமாக தேசிய மலரான தாமரை அச்சிடப்பட்டு உள்ளது.

இது, போலி பாஸ்போர்ட்டுகளை எளிதாக அடையாளம் காண உதவும். சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின்  வழிகாட்டுதல்படி, பாஸ்போர்ட்டில் இந்த பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தாமரை மட்டுமின்றி, நாட்டின் மற்ற தேசிய சின்னங்களும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டில் பயன்படுத்தப்படும். இப்போது, தாமரை பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வேறு தேசிய சின்னம் பயன்படுத்தப்படும்,’’ என்றார்.

Tags : Lotus ,government ,Opposition Central , Central government, passport, lotus symbol, opposition parties
× RELATED தென்சென்னை தொகுதியில் தாமரையை மலரச்...