×

சேலம் மாநகர போலீசில் ஸ்பாட் பைன் முறைகேடு சப்.இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: தினகரன் செய்தியால் நடவடிக்கை

சேலம்: சேலம் மாநகரில் ஸ்பாட் பைன் விதிப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட எஸ்ஐ பற்றி சமூகவலைதளங்களில் வீடியோ வெளியானது. இதுபற்றிய செய்தி தினகரனில் படத்துடன் வெளியானதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலம் மாநகரில் போக்குவரத்து விதி மீறிய வாகன ஓட்டிகளிடம் ஸ்பாட் பைனாக ரூ.200 வாங்கிக்கொண்டு எஸ்ஐ கோவிந்தராஜ், ஈ செலானில் பணம் வாங்கவில்லை (அன்பெய்டு) என ரசீது கொடுக்கும் காட்சி, வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதுபற்றிய செய்தி தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் வெளியானது. இதையடுத்து கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்படி போக்குவரத்து துணை கமிஷனர் செந்தில் விசாரித்தார். அதில் எஸ்ஐ கோவிந்தராஜ், விதிமீறும் நபர்களிடம் ₹100 முதல் ₹1000 வரை வாங்கிக் கொண்டு, பணம் பெறவில்லை என ஈ செலான் கொடுத்து ஆயிரக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.

இதுதொடர்பான அறிக்கையை அவர் கமிஷனர் செந்தில்குமாரிடம் அளித்தார். அதன்படி எஸ்ஐ கோவிந்தராஜை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டார். மேலும், இதேபோல் மாநகர போக்குவரத்து போலீசில் பைன் விதிக்கும் அனைத்து எஸ்ஐக்கள், ஏட்டுகளிடம் துணை கமிஷனர் செந்தில் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளார். இதில் மேலும் சிலர், இந்த மாதிரி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களிடமும், எஸ்ஐ கோவிந்தராஜூடன் பணியில் இருந்து 2 ஏட்டுகளுக்கு முறைகேட்டில் தொடர்புள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.

தினமும் 15 ஆயிரம் வரை சுருட்டல்
போக்குவரத்து விதிமீறும் நபர்களிடம் ஹெல்மெட் போடாததற்கு 100ம், லைசென்ஸ், ஆர்சி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி வரும் நபர்களிடம் 1000 வரையிலும் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த பணத்தை எஸ்ஐக்கள் பெற்றுக்கொண்டு, பணத்தை பெறவில்லை என ரசீது கொடுத்து அனுப்புகின்றனர். மாலையில், போக்குவரத்து பிரிவில் கணக்கு ஒப்படைக்கும்போது, குறைந்த அளவில் அபராதம் வசூலிக்கப்பட்டதாக கணக்கு காட்டுகின்றனர். அந்த பணத்தை மட்டுமே அடுத்தநாள் காைல கருவூலத்தில் செலுத்துகின்றனர். இதன்மூலம் தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும், கடந்த ஓராண்டிற்கும் மேலாக முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ஊழல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர சமூக ஆர்வலர் முடிவு
ஸ்பாட் பைன் முறைகேடு குறித்து சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலன் ஜெயசீலன் (45)தான் வீடியோ பதிவு செய்து கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தார். மேலும், இந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகம் முழுவதும் இதுபோன்ற முறைகேடு நடந்திருக்கிறது. அதனால், விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அனைத்து ஆதாரத்தையும் அளிக்க உள்ளேன். மேலும், ஸ்பாட் பைனில் போக்குவரத்து போலீசார் செய்யும் முறைகேடுகளை தடுக்க விரிவான  விசாரணை நடத்த வேண்டும். இதற்கென தனியாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்.



Tags : Sub Inspector ,Salem Municipal Police ,Dinakaran News Salem Municipal Police , In Salem Municipal Police, Spot Pine, Sub Inspector
× RELATED தளவாபாளையம் அருகே பதுக்கி வைத்து மது விற்றவர் கைது