×

பேய்க்குளம் வழியாக தனியார் பஸ்கள் முறையாக இயக்கப்படுமா?... பயணிகள் எதிர்பார்ப்பு

சாத்தான்குளம்: பேய்க்குளம் வழியாக  இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகள்  முறையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடையும் நிலை தொடர்கிறது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்தும், தூத்துக்குடியில் இருந்தும் சாத்தான்குளத்துக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தனியார் பேருந்து காலையில் 5.30 மணிக்கு புறப்பட்டு வெள்ளூர், மணல்விளை, பேய்க்குளம், கருங்கடல், செட்டிக்குளம் வழியாக சாத்தான்குளத்திற்கு வருகிறது. மீண்டும் அதே வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டத்திற்கு இயக்கப்படுகிறது. ஆனால் இந்த தனியார் பேருந்தானது காலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படாமல் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதேபோல் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, சாலைப்புதூர், பேய்க்குளம், கட்டாரிமங்களம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, தேரிப்பனை, அச்சம்பாடு, தைலாப்புரம் வழியாக நாசரேத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து மாலையில் 6 மணிக்கு நாங்குநேரியில் புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு பேய்க்குளம் வந்து நாசரேத் சென்று மீண்டும் நாசரேத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு வெள்ளமடம், உடையார்குளம், குப்பாபுரம், குறிப்பன்குளம், சின்னமாடன்குடியிருப்பு, அம்பலச்சேரி, கட்டாரிமங்களம், பழனியப்பபுரம், பேய்க்குளம், சாலைப்புதூர், முனைஞ்சிப்பட்டி, மூலைக்கரைப்பட்டி வழியாக நாங்குநேரி செல்ல வேண்டும். ஆனால் இந்த பேருந்து மாலையில் இயக்கப்படும் நேரத்தில் இரவு 7.15 மணிக்கு பேய்க்குளத்துடன் நின்று விடுகிறது.

இதனால் கட்டாரிமங்களம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, தேரிப்பனை, அச்சம்பாடு, தைலாப்புரம் வழியாக நாசரேத்திற்கு செல்லும் பொதுமக்களும் வெள்ளமடம், உடையார்குளம், குப்பாபுரம், குறிப்பன்குளம், சின்னமாடன்குடியிருப்பு, அம்பலச்சேரி, கட்டாரிமங்களம், பழனியப்பபுரம், பேய்க்குளம், சாலைப்புதூர், முனைஞ்சிப்பட்டி, மூலைக்கரைப்பட்டி செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த வழித்தடத்தில் உள்ள கட்டாரிமங்களம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, தேரிப்பனை, அச்சம்பாடு, வெள்ளமடம், உடையார்குளம், குப்பாபுரம், குறிப்பன்குளம், சின்னமாடன்குடியிருப்பு, பழனியப்பபுரம் ஆகிய ஊர் மக்களுக்கு வேறு பேருந்துகள் கிடையாது என்பதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்த பேருந்து அரசு விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுவதில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இதணை கண்காணித்து பேய்க்குளம், சாத்தான்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

Tags : Private buses
× RELATED சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர்...