×

மேகமலைப் பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும்: அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் வலியுறுத்தல்

தேனி: மேகமலைப் பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார். வேகமான காற்று வீசும் மலைகள் என்றும் அழைக்கப்படும் மேகமலை, கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலையில், தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் இங்கு 100க்கும் மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும். இந்த மலைப்பகுதியில் உள்ள பல்லுயிர் தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேகமலைப் பகுதியை சூழல் சுற்றுலாத் தலமாக அறிவிக்குமாறு மத்திய அரசை தேனி தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், இயற்கை எழில் கொஞ்சும் மேகமலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதாகக் குறிப்பிட்டார். மேலும் ஏலக்காய், தேயிலைத் தோட்டங்கள் இருப்பதாகவும், கேரள எல்லையை ஒட்டி 636 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் வனவிலங்கு சரணாலயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் மேகமலை பகுதியை சூழல் சுற்றுலாத் தலமாக அறிவிக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சரை கேட்டுக் கொள்வதாகவும், அங்கு போதிய வசதிகள் செய்து கொடுப்பதன் மூலம் உலகளவில் பிரபலமாகும் என்றும் ரவீந்திரநாத் தெரிவித்தார்.


Tags : Meghamalai ,tourist destination ,AIADMK ,OP Raveendranath , Declare Meghalaya a tourist destination: AIADMK MP OP Raveendranath
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...