×

நெல்லை மாவட்டத்தில் மழை இல்லாததால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

நெல்லை:  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது.நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் வடகிழக்கு பருவமழைக் காலங்களாகும். பொதுவாக நெல்லை,  தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை கிடைக்கும் என்பதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள்  பெரும்பாலும் நிரம்பி விடும். இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு பலத்த மழை பெய்தது. இதனால் பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி விட்டன. ஆனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்ததால், அந்த அணை மட்டும்  இதுவரை நிரம்பவில்லை. எனினும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டி விட்டது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மழை குறைந்து விட்டது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 151.61  அடியாக உள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 1280 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1319 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணைப்பகுதியில் மட்டும் 1 மிமீ மழை பதிவாகியுள்ளது. நெல்லை  மாவட்டத்திலும் எங்கும் மழை இல்லை. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 106.50 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 761 கன அடி தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது. அணை மூடப்பட்டுள்ளது.

நிரம்பாத 4 அணைகள்
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 11 அணைகள் இருந்தன. தென்காசி மாவட்டம் பிரிந்ததால் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார்  அணை ஆகிய 5 அணைகளும் தென்காசி மாவட்டத்திற்கு சென்று விட்டது. நெல்லை மாவட்டத்தில் 6 அணைகளில் பாபநாசம், சேர்வலாறு அணைகள்  தவிர மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய நான்கு அணைகளும் நிரம்பவில்லை. மேற்குத் தொடர்ச்சி  மலைப்பகுதியில் களக்காடு அருகே வடக்கு பச்சையாறு அணையும், வள்ளியூர் அருகே நம்பியாறு அணையும், திருக்குறுங்குடி அருகே கொடுமுடியாறு  அணையும் அமைந்துள்ளன.  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்த போதிலும் இந்த அணைப்பகுதிகளில் போதிய மழை  இல்லை. நேற்றைய நிலவரப்படி 49 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 39.50 அடியாக உள்ளது. அணைக்கு  விநாடிக்கு 88 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் 61 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதே போல நம்பியாறு அணையின்  மொத்த கொள்ளளவு 23.60 அடியாகும். நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 18.72 அடியாக உள்ளது. இந்த அணையில் நீர் இருப்பு 63  சதவீதமாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து இல்லை. இதேபோல 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 40 அடியாக  உள்ளது. அணைக்கு விநாடிக்கு 30 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

Tags : paddy district ,Papanasam ,Manimuthar ,Manimuthur , rainfall , paddy district,Papanasam ,Manimuthur dams
× RELATED நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து...