×

தூத்துக்குடியில் 15 நாளாக கண்டுகொள்ளாத அதிகாரிகள் மழை பாதித்த சாலைகள் கவர்னருக்காக அவசர கதியில் சீரமைப்பு: வாட்ஸ் அப்பில் வறுத்தெடுக்கும் மக்கள்

தூத்துக்குடி:  தூத்துக்குடியில் மழை, வெள்ளம் பாதித்த சாலைகளை 15 நாட்களாக பாராமுகமாக இருந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள்,  கவர்னர் வருகையை முன்னிட்டு அவசரகதியில் சீரமைத்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், வாட்ஸ் அப்பில் வறுத்தெடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் மகாகவி பாரதியாரின் 138வது பிறந்த நாள் விழா நடந்தது. இதில் பங்கேற்பதற்காக  சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு வாகைக்குளம் விமான நிலையத்தில்  கலெக்டர்  சந்தீப் நந்தூரி தலைமையில் எஸ்பி அருண் பாலகோபாலன்,  மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், சப்- கலெக்டர்  சிம்ரன் ஜீத்சிங்  காலோன் உள்ளிட்டோர் பூங்கொடுத்து வரவேற்றனர்.  இதை ஏற்றுக்கொண்டு தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்த கவர்னர், அங்கிருந்து கார் மூலர் எட்டயபுரம்  சென்றார். விழா முடிந்த பிறகு மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி திரும்பிய அவர், விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

 கவர்னர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையம் முதல் தூத்துக்குடி நகரம், எட்டயபுரம்  வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டிருந்தது. முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனால் பயணிகள், வாகனஓட்டிகள் உள்ளிட்ட  பலரும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதனிடையே தூத்துக்குடி மாநகரில் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையாலும், பெருக்கெடுத்த வெள்ளத்தாலும் பல்வேறு பகுதிகளில் சாலைகள்  உருக்குலைந்து போயின. தாழ்வான பகுதிகளிலும், வீதிகளிலும் குடியிருப்புகளை சுற்றிலும் நாட்கணக்கில் மழைநீர் தேங்கி நின்றது. இவற்றை  அகற்றக்கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பல்வேறு தரப்பு போராட்டம் நடத்தியும் தேங்கி நின்ற மழைநீரை முற்றிலும்  அகற்றாமல் பாராமுகமாக இருந்து வந்தனர். இந்நிலையில் கவர்னர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளை ரோட்டில் இருந்து பழைய மாநகராட்சி, விஇ ரோடு,  எட்டயபுரம் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சாலை ஓரங்களில் தேங்கியிருந்த மழை நீரை அவசர கதியில் அகற்றும்பணி நேற்று காலை  நடந்தேறியது. குறிப்பாக ஏராளமான லாரிகள் கொண்டுவரப்பட்டு மின்மோட்டார் மூலம் தேங்கிநின்ற மழைநீர் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது.

 அத்துடன் தண்ணீர் சேறும் சகதியுமாக  இருந்த பகுதிகளில் பல லாரிகள் மண் கொண்டு வரப்பட்டு அவை அங்கு கொட்டப்பட்டு சமன்  செய்யப்பட்டன. மேலும் ஈரமான பகுதிகளில் கிருமிநாசினியாக பிளீச்சிங் பவுடர்கள் கொட்டப்பட்டன.சாலைகளில் மழையால் ஏற்பட்டிருந்த குண்டும் குழியுமான பகுதிகளில் உடனடியாக சிமென்ட் கலவைகள், தார், ஜல்லிகற்கள் கொண்டு பேட்ச் ஒர்க்  செய்யப்பட்டு ரோடு சமன் செய்யப்பட்டது.சாலையோரங்களில் கடந்த 15 நாட்களாக கொட்டப்பட்டு கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. ரோட்டோரங்களில் சுண்ணாம்பு பவுடர்கள் தூவப்பட்டு  சாலைகள் பளீச் என்ற தோற்றத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் அந்தோணியார் கோயில் பகுதி உள்ளிட்ட இடங்களில் கவர்னர் வந்து செல்லும்  சாலைகளில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டது.  இவ்வாறு நேற்று காலை முதல் மதியத்திற்குள் கவர்னர் பயணிக்கும்  சாலைகள் அனைத்தும் ஒருமணி நேரத்திற்குள் மாற்றம் செய்யப்பட்டன.

 கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மாநகராட்சிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ரோடுகள், தெருக்கள், வீடுகளில் தண்ணீர்  தேங்கியிருந்து, பல நாட்களாக மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தியும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் அதே   மாநகராட்சி நேற்று புயல் வேகத்தில் கவர்னர் வருகைக்காக பம்பரமாக சுழன்று ஒரு மணி நேரத்திற்குள் முக்கிய பகுதிகளை மட்டும் எப்படி மாற்றி  அமைத்துள்ளனர் என்று ஆச்சரியப்பட்டனர். தங்கள் பகுதிக்கு தினமும் இது போன்று கவர்னர் வந்தால் மட்டுமே அதிகாரிகள் வெள்ளம் பாதித்த  பகுதிகளை சீரமைப்பார்கள் போலும் என்று தங்களுக்குள்ளேயே பொருமி, பெருமூச்சுவிட்டவாறே சென்றனர். பொதுமக்களில் சிலர் முக்கிய பகுதிகளை  படமெடுத்து கவர்னர் வருகைக்கு முன், கவர்னர் வருகைக்கு பின் என்று வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் மீம்ஸ்கள் போட்டு மாநகராட்சி அதிகாரிகளை  வறுத்தெடுத்து வருகின்றனர்.

Tags : Tuticorin ,Governor ,Roads ,Watts , Thoothukudi, Emergency Control, Rain-affected , Watts
× RELATED ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட...