×

முகநூலில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததால் நடவடிக்கை: தமிழகத்தில் முதல் முறையாக திருச்சியை சேர்ந்தவர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் பாலக்கரையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் ஆபாச வீடியோ பகிர்ந்ததாக போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ  பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர், என, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., ரவி கூறினார். இது தொடர்பாக டி.ஜி.பி., ரவி அளித்த  பேட்டியில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம்.

ஆபாச படம் மற்றும் வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் வைத்திருப்பதும், அது தொடர்பான, லிங்க்களை பதிவிறக்கம் செய்வதும் குற்றம். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர், தகவல் தொழில் நுட்பம்  மற்றும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர். இவர்களுக்கு, மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை கிடைக்கும் என்றார்.

தமிழகத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் பார்த்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில், சென்னையில் அதிகம் பேர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்த்து இருப்பது தெரிய  வந்துள்ளது. அவர்கள், எந்த மாதிரியான வீடியோக்கள் மற்றும் படங்களை பார்த்தனர் என்பதையும் கண்டறிந்துள்ளோம். அவர்களின் புகைப்படம், வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்களை, அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள, காவல்  நிலையங்களுக்கு அனுப்பி வைக்க உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், முகநூலில் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்ததாக முதல் முறையாக திருச்சி மாவட்டம் பாலக்கரையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். 15 பேர்  அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவை கிறிஸ்டோபர் நடத்தி வந்ததாகவும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். நிலவன், ஆதவன் என்ற பெயரில் முகுநூலிலும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆபாச வீடியோ வீடியோ பார்த்தால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்த நிலையில், திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Tamil Nadu , Face, porn video, Tamil, Trichy, arrested
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...