×

ஆணவக்கொலை செய்ய முயற்சி? காதல் தம்பதியை பிரித்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜி.க்கு ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: காதல் திருமணம் செய்த தம்பதியை பிரித்த திருத்தங்கல், பேரையூர் போலீசார் மீது தென்மண்டல ஐஜி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியை சேர்ந்த சண்முகராஜலிங்கம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நானும், எங்கள் பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணும் காதலித்தோம். இந்த விஷயம் தெரிந்த அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து நாங்கள் இருவரும் திருத்தங்கல் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் கடந்த மாதம் 7ம் தேதி மதுரை மாவட்டம், பேரையூரில் உள்ள எனது மாமா வீட்டுக்கு சென்றோம். அவர் எங்களை பேரையூர் போலீசில் சரணடைய செய்தார்.

ஆனால் போலீசார் எங்களை மிரட்டி, வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். மேலும் எனது மனைவியை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எங்களை சேர்த்து வைக்கவும், உரிய பாதுகாப்பு அளிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் வக்கீல், ‘‘மனுதாரர் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர் என்பதால், அவர் காதலித்து திருமணம் செய்த பெண்ணை, பெற்றோர் ஆணவக்கொலை செய்ய முயற்சி செய்கின்றனர்” என்றார். அதற்கான ஆதாரங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரர், அந்த பெண் மற்றும் சம்பந்தப்பட்ட போலீசார் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகாசி டிஎஸ்பி,  இன்ஸ்பெக்டர் ஆஜராகினர். அதேபோல சண்முகராஜலிங்கம், அவர் காதலித்து திருமணம் செய்த பெண்ணும் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி விசாரித்தார். அந்த பெண், சண்முகராஜலிங்கத்துடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண் மேஜர் என்பதால் மனுதாரருடன் செல்ல நீதிபதி அனுமதித்தார். மேலும், மனுதாரர் திருத்தங்கலில் இருக்கும் வரை போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். மனுதாரருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக பேரையூர், திருத்தங்கல் போலீசார் மீது தென்மண்டல ஐஜி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : IG ,Icort Branch , Adolescence, trying to do? , To IG, Icort Branch, Order of Action
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு