சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 16.3 லட்சம் தங்கம், லேப்டாப் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து பிளைய் துபாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஜகுபர் சாதிக் (39) என்பவர் சுற்றுலா பயணியாக துபாய் சென்றுவிட்டு வந்திருந்தார். அவரது சூட்கேசில் உபயோகப்படுத்திய 17 லேப்டாப்கள், கைப்பையில் 22 சிகரெட் பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மொத்த மதிப்பு 1 லட்சத்து 30,0000 ஆகும். எனவே சுங்க அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். அதை கொடுத்துவிட்டு எந்தவித பதற்றமும் இல்லாமல் விமான நிலையத்தைவிட்டு சர்வ சாதாரணமாக வெளியில் சென்றார். அதனால் சுங்க அதிகாரிகளுக்கு சாதிக் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை மீண்டும் விமான நிலையத்திற்கு உள்ளே அழைத்தனர். ஆனால் அவர் அதுதான் என்னிடம் இருந்த எல்லாவற்றையும் பறித்து விட்டீர்களே இன்னும் என்ன என்னிடம் இருக்கிறது, என்னுடைய ஆடைகளையும் பிடுங்கிவிட்டு அனுப்ப போகிறீர்களா என சுங்க அதிகாரிகளை பார்த்து மிகவும் நக்கலாக கேட்டார். சுங்க அதிகாரிகள் அவரை தனியறைக்கு அழைத்து சென்று உள்ளாடைகளை கலைந்து சோதனை செய்தனர். அவரது உள்ளாடையில் 40 கிராம் தங்க செயின், 345 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு 15 லட்சம் ஆகும்.

* ராமநாதபுரத்தை சேர்ந்த பாபு (40) சென்னை மண்ணடி டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு 12 மணியளவில் வேலை முடிந்து தங்கி இருந்த அறைக்கு சென்றபோது 4வது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* வேளச்சேரி, விஜய நகர், 3வது மெயின் ரோட்டை சேர்ந்த சுஜாதா (71) நேற்று முன்தினம் இரவு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல்விளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து உடல் கருகி பலியானார்.

* கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விநாயகமூர்த்தி (24) நேற்று வியாசர்பாடி முல்லை நகரில் ஒரு ஆட்டோவை முந்தி செல்ல முயன்றபோது ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் விநாயகமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

* வில்லிவாக்கம் மார்கெட் அருகே உள்ள மவுனசாமி மடம் தெருவில் நேற்று அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

Related Stories:

>