×

அமைச்சர் தொகுதியான வண்ணாரப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்

* மக்களுக்கு நோய் பாதிப்பு  
* போராட்டம் நடத்த முடிவு

தண்டையார்பேட்டை: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் சொந்த தொகுதியான வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெரு, பரசுராமன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் 48வது வார்டுக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெரு, பரசுராமன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தெருக்களில் 5000க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் பல்வேறு நோய் தாக்குதலால் அவதிப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் கடந்த ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. தொகுதி எம்எல்ஏவும், மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமாரிடமும் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. தொடர்ந்து குழாய்களில்  கழிவுநீர் கலந்து வருகிறது.

இதனால் இந்த பகுதி மக்கள் மலேரியா, டெங்கு, மர்ம காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், குடிநீர் இணைப்பு வழங்கும் போது  பாதாள சாக்கடை தொட்டி வழியாக குடிநீர் குழாய் பைப்பை கொண்டு சென்று உள்ளனர்.
மேலும் குடிநீர் லாரியில் கொண்டு வரும் தண்ணீரை பாதாள சாக்கடை தொட்டியில் உள்ள குழாய்  வழியாக தண்ணீர் வழங்குகிறார்கள். இதன் காரணமாகவே குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் நாங்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதோடு, இதுவரையில் குடித்த சுகாதாரமற்ற தண்ணீரால் வந்துள்ள நோய்களுக்காகவும் மருத்துவமனைகளுக்கு அலைந்து வருகிறோம். நாட்டில் எந்த பிரச்னை என்றாலும் உடனடியாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க முன்வரும் அமைச்சர் ஜெயக்குமார் தனது சொந்த தொகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை மக்கள் குடிப்பது குறித்து வாய் திறப்பது இல்லை. இனியும் எங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க அமைச்சர் ஜெயக்குமார் நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.


Tags : constituency ,minister ,Wasarapet , sewage and drinking water, minister's constituency, Wasarapet
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...