×

குப்பையை தரம் பிரித்து கொடுக்காதவர்களுக்கு 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம்: திடக்கழிவு மேலாண்மைக் குழு தலைவர் ஜோதிமணி பேச்சு

சென்னை: குப்பையை தரம் பிரித்து கொடுக்காத பொதுமக்களுக்கு 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டம் உள்ளது என திடக்கழிவு மேலாண்மை குழு தலைவர் ஜோதிமணி தெரிவித்தார். திடக்கழிவு சுத்திகரிப்பில் உயிரி நிலப்பரப்பு மீட்பு செயலாக்கம் மற்றும் சட்ட விதிகள் குறித்த 6வது மாநில கண்காணிப்பு குழு கூட்டம் கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம், தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மைக்கான மாநில தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்புக் குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி (ஓய்வு), சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர்  கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மையை எவ்வாறு கையாள்வது என்பன போன்ற ஆலோசனைகளை மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக அதிகாரிகள்  மற்றும் அலுவலர்களுக்கு வழங்கினர்.

அப்போது, திடக்கழிவு மேலாண்மைக்குழு தலைவரும்  ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஜோதிமணி பேசியதாவது: இன்றைய நோக்கம் திடக்கழிவு மேலாண்மையை முறையாக எப்படி கையாள வேண்டும்.  மறுசுழற்சி முறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதுதான். திடக்கழிவை பொறுத்தவரையில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை  வீடுகளில் இருந்து பிரித்து கொடுத்தாலே 60 சதவீதம் இதற்கு தீர்வு கிடைக்கும். திடக்கழிவு மேலாண்மையில் வீடுகளில் உள்ள குப்பையை பிரித்து கொடுக்காதவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி  5  ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். மேலும், தண்டனையும் கூட வழங்கலாம். அதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பெருங்குடி போன்ற இடங்களில் மிகப்பெரிய குப்பை கிடங்குகள் உருவானதற்கு காரணம் பொதுமக்கள் குப்பையை பிரித்து கொடுக்காததே. மனித மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்தில் மருத்துவமனைகள்  அகற்ற வேண்டும். இல்லையென்றால், 5 ஆண்டுகள் வரையில் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கலாம். உத்தரபிரதேசத்தில் ஒரு மருத்துவமனையில் இந்த நிகழ்வு நடந்தது. ஆனால், எச்சரிக்கையை தொடர்ந்து யாருக்கும் தண்டனை விதிக்கவில்லை.  திடக்கழிவு மேலாண்மையை பொறுத்தவரையில் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்காமல் மாற்றலாம் என இருக்கிறோம். ஒருவேளை அது முடியாவிட்டால் நிச்சயம் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும். செம்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மறு சுழற்சி பணிகள் முடிந்துள்ளன. பெருங்குடியில் இருப்பது 25 ஆண்டு குப்பை. அவற்றை பயோ மறுசுழற்சி முறையில் சரிசெய்ய 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Disaster Management Committee , Litter, Fines, Solidarity Management Committee, Chairman Jyotimani
× RELATED மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...