×

உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து, அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதே கட்சிகள் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக, கூட்டணி கட்சி தலைவர்கள், முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வருடன் கடந்த சில நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 6 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுலஇந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு அறிவிக்கப்பட உள்ள சீட் விவரங்களை விரைவில் மாவட்ட பொறுப்பாளர்களே அறிவிக்கும்படி, முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். முன்னதாக, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இல்லாததால் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

Tags : CM ,party leaders ,election ,government , Local Elections, AIADMK, CM Edappadi
× RELATED பிரதமர் மோடியின் பேச்சு குறித்து...