×

போடி - மூணாறு இடையே மலைச்சாலையில் மண் சரிவு: 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

போடி: மலைச்சாலையில் அதிகாலை திடீரென ஏற்பட்ட மண்சரிவால் போடி - மூணாறு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 7 மணி நேரம் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். தேனி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் போடி உள்ளது. இங்கிருந்து 21 கிமீ தொலைவில் போடிமெட்டு மலைப்பகுதி உள்ளது. போடி - போடிமெட்டு - மூணாறு மலைச்சாலையில் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கடந்த 3 மாதங்களாக தொடர்மழை பெய்ததால், மலைச்சாலையில் அவ்வப்போது மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்சரிவு அகற்றப்பட்ட பின்னர் போக்குவரத்து சீராகும். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணியளவில், 8வது கொண்டை ஊசி வளைவு, புலியூத்து பகுதியில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. சாலையை முழுவதுமாக மண் மூடியதால் போடி - மூணாறு இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குமணன், குரங்கணி போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்தனர். இரவு நேரம் என்பதால் மண்ணை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மண் அகற்றப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணியளவில் போடி - மூணாறு மலைச்சாலையில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது. இந்த மண் சரிவால் 7 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பயணிகள், வியாபாரிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

Tags : mountain range ,Bodi - Munnar ,podi - Munnar , podi - Munnar, mountain slope, mud fall, 7 hours, traffic impact
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...