×

இரண்டாவது நாளாக மகாதீப தரிசனம் அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: அமர்வு, சிறப்பு தரிசனம் ரத்து

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்திபெற்ற மகாதீப பெருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி, அன்று மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். 2வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் சிவாலய தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, கோயில் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மலை மீது காட்சியளித்த மகாதீபத்தை பக்தர்கள் தரிசித்தனர். மேலும், வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். மலைமீது மகாதீபம் ஏற்றுவதற்காக, நெய் மற்றும் திரி, கற்பூரம் மற்றும் பூஜை பொருட்கள் அண்ணாமலையார் கோயிலில் இருந்து மலை உச்சிக்கு தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது. தீபம் ஏற்றும் பருவதகுலத்தினர் மற்றும் கோயில் திருப்பணி ஊழியர்கள், மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றினர். மகாதீபம், வரும் 20ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சிதரும். இந்த நாட்களில் கிரிவலம் செல்வதும், கோயிலில் வழிபடுவதும் சிறப்புக்குரியது என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று பக்தர்களின் வருகை அதிகரித்திருக்கிறது.

நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். இதையொட்டி வரும் 20ம் தேதி வரை அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயிலில் ஏற முண்டியடித்த கூட்டம்: திருவண்ணாமலை மகாதீபத்திருவிழாவுக்கு வந்த பக்தர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் செல்வதற்காக, திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நேற்று காத்திருந்தனர். கூட்டம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியதால் ரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. காலையில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலில் பக்தர்கள் முண்டியடித்து ஏறினர். அப்போது, வயதானவர்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். கூட்ட நெரிசலால் இடம்பிடிக்க ஜன்னல் வழியாக சிறுவர்களை ரயில் பெட்டிக்குள் ஏற்றினர்.

தீப மை பிரசாதம் எப்போது?
அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீப கொப்பரையில் இருந்து பெறப்படும் தீபச்சுடர் பிரசாதம் (தீப மை), ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனத்துக்கு பிறகு பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். அதன்படி, அடுத்த மாதம் 10ம் ேததி ஆருத்ரா தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறுகிறது. அப்போது, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு தீப ைம அணிவிக்கப்படும். அதன்பிறகு, பக்தர்களுக்கு வழங்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Tags : darshan ,session ,pilgrims ,gathering ,Mahadeepa ,Annamaliyar ,Annamalayar , Mahadeepa Darshanam, Annamalaiyar Temple, Meeting of devotees, Session, Special Darshan
× RELATED ஒசூர் அடுத்த பாகலூர் அருகே நாகண்ணா ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு