×

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊராட்சி தேர்தல் நடத்த தடையில்லை: 2011 மக்கள் தொகை அடிப்படையில் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊராட்சி  தேர்தலை 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்த வேண்டும்; 9 மாவட்டங்களில் 3 மாதத்துக்குள் தேர்தலை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த 9ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் முதலாவதாக தொடரப்பட்ட வழக்கில் மாநிலத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர்த்துவிட்டு, தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திமுக சார்பில் புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஊரக உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையறையை தெளிவுபடுத்திய பின்னர் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதுவரை தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், காங்கிரஸ், ம.தி.மு.க., 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரேகட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “தமிழகத்தில் நடத்தப்பட இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்ன என்பது குறித்து தெரிவிக்கவில்லை. இதில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படிதான் தேர்தலை நடத்த வேண்டும். அதேபோல் வார்டு வரையறையை பொறுத்தமட்டில் கடந்த 1991ம் ஆண்டும் எடுக்கப்பட்டதை வைத்துக்கொண்டு தற்போது தேர்தலை நடத்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளனர்.

இது தேர்தல் சட்ட விதிகளுக்கு எதிரான ஒன்றாகும். தொகுதி மறுவரையறை நடத்தி முடிக்கப்பட்டு விட்டதா என்பதை ஆராயாமல் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதே நிலைதான் இட ஒதுக்கீடு விவகாரத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது.  உள்ளாட்சிக்கான பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் கடந்த 2016ம் ஆண்டு முதல் மறுவரையறை தொடர்பான எந்த பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்ததாக தெரியவில்லை. அப்படி நடந்து இருந்தால் 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கும். மற்ற தேர்தல் போன்று உள்ளாட்சி தேர்தல் கிடையாது. இடஒதுக்கீடு முறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதுகுறித்து பஞ்சாயத்து சட்ட விதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி மறுவரையறை என்பது சுழற்சி முறையாகும். அதனை கடைபிடித்து தான் ஆக வேண்டும். இத்தனை ஆண்டுகளாக இந்த பணியை மேற்கொள்ளாமல் இருந்த மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு ஆகியவைகளை மறுவரையறை ஆணையம் எந்த கேள்வியும் கேட்காமல் இருந்துள்ளது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊராட்சி தலைவர் பதவிக்கு 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே இப்போதும் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் மற்றும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு செய்யப்படாமல் நடத்தப்படும் தேர்தலுக்கு அனுமதி வழங்கக் கூடாது. அதனால் தற்போது வழங்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “எங்களது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப்பத்திரத்தை எதிர் தரப்பினர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என தெரிய வருகிறது. இதில் மறுவரையறை, இடஒதுக்கீடு என அனைத்து பணிகளும் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி முடிவடைந்து விட்டது. மேலும் இந்த விவகாரத்தில் ஏற்கனவே தெளிவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், தற்போது மேற்கொண்டு வாதங்கள் எதுவும் தேவையில்லை’’ என வாதிட்டார்.
 இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, “தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் நடத்த வேண்டும்.

இதில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது புதிய மாவட்டங்களுக்கு அடுத்த 3 மாதத்தில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை விரைந்து முடித்து தேர்தலை நடத்த வேண்டும். இதுகுறித்த அனைத்து பணிகளையும் மறுவரையறை ஆணையம் கண்காணிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார். இதில், புதிய மாவட்டங்களுக்கு முன்னதாக 4 மாதம் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரம் வாதம்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரம் வாதிட்டார். அப்போது, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தலை நடத்த வேண்டும். அதில் தேர்தல் சட்ட விதிகள் என்பது முழுமையாக பின்பற்றப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி இருந்த ப.சிதம்பரம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் முதல்முறையாக நேற்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

‘தேர்தல் நடப்பது சந்தேகம்’
நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறும்போது, “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 2011ம் ஆண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. அதனால் தற்போது மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அறிவிப்பாணையின் அடிப்படையில் தேர்தல் நடக்காது. வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடப்பது என்பது சந்தேகம்தான்’’ என்றார்.

மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு வெளியீடு சென்னை பொது பிரிவுக்கு ஒதுக்கீடு:
 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பொது பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடஓதுக்கீட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 7 மாநகராட்சிகள்  பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி எஸ்சி  பிரிவினருக்கும், வேலூர் மாநகராட்சி எஸ்சி பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து மீதம் உள்ள சென்னை, ஆவடி,  ஓசூர், தஞ்சை, சேலம், கோவை ஆகிய மாநகராட்சிகளுக்கான மேயர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,districts ,Tamil Nadu ,Panchayat polls , Tamil Nadu, Panchayat Election, Population A, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...