×

5 மாதத்துக்குமுன் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை பக்கவாட்டில் உடைப்பு ஏற்பட்டதால் வெளியேறும் தண்ணீர்: விவசாயிகள் அதிர்ச்சி

பவானி: பவானி அருகே புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையின் பக்கவாட்டில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வெளியேறி வருகிறது. பவானி அருகே ஆலத்தூர் ஊராட்சியில் உப்புக்காரப் பள்ளத்தின் குறுக்கே ரூ.10.70 லட்சம் மதிப்பில் கடந்த ஜூலை மாதம் தடுப்பணை கட்டப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட இந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கி, உபரிநீர் தடுப்பணையை தாண்டி செல்ல வேண்டும். ஆனால், தடுப்பணையின் இடது பக்கவாட்டில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தொடர்ந்து வெளியேறிச் சென்று வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: உப்புக்காரப் பள்ளத்தின் குறுக்கே கடந்த ஜூலையில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால், சரிவர கட்டப்படாததால் தண்ணீர் தேங்காமல் வெளியேறி வருகிறது. தடுப்பணையின் பக்கவாட்டில் கரைகள் பலப்படுத்தப்படவில்லை. தடுப்பணைக்கு அருகே கட்டப்பட்ட பக்கவாட்டு சுவர்கள், கடமைக்குக் கட்டப்பட்டுள்ளது. சேதமடைந்து காணப்படும் இந்த சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை உள்ளது. மேலும், பக்கவாட்டில் கரைகளுக்கு மண் கொட்டி நிரப்பாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால் தடுப்பணையில் தண்ணீர் தேங்காமல், பக்கவாட்டில் பெருக்கெடுத்து செல்கிறது. மழைக்காலங்களில் வரும் தண்ணீரை சேமிக்காமல், தண்ணீர் இல்லாத நேரத்தில் எவ்வாறு இந்த தடுப்பணையில் தண்ணீரைத் தேக்க முடியும்?. தடுப்பணையின் பக்கவாட்டுச் சுவரை பலப்படுத்துவதோடு, மண் கொட்டி நிரப்பி தண்ணீர் வெளியேறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : 5 months ago, newly built, sidewalk breaks, farmers shock
× RELATED அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் ஏரியில் உடைப்பு