×

போடி-மூணாறு மலைச்சாலையில் திடீர் மண்சரிவு

போடி: போடி-மூணாறு மலைச்சாலையில் இன்று அதிகாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சாலையில் 7 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். தேனி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் போடி உள்ளது. போடியிலிருந்து 21 கிமீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையில் தமிழக எல்லையில் போடிமெட்டு உள்ளது. போடி-போடிமெட்டு-மூணாறு மலைச்சாலை 17 கொண்டை ஊசி வளைவுகளை உடையது. கடந்த 3 மாதங்களாக தொடர் மழை காரணமாக மலைச்சாலையில் அவ்வப்போது மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்சரிவு அகற்றப்பட்ட பின்னர் போக்குவரத்து சீராகும்.

இந்நிலையில் இன்று அதிகாலை 12.45 மணியளவில், 8வது கொண்டை ஊசி வளைவு, புலியூத்து பகுதியில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. சாலையை முழுவதுமாக மண் மூடியதால் போடி-மூணாறு இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் கேரளா செல்லும் வாகனங்கள் போடி முந்தல் வாகன சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டன. கேரளாவிலிருந்து, தமிழகத்திற்கு வந்த  வாகனங்கள் போடி மெட்டு சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன. மண் சரிந்த இடத்துக்கு நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் குமணன், போடி தாசில்தார் மணிமாறன், ஆர்ஐ ராமர், குரங்கணி போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்தனர். இரவு நேரம் என்பதால் சரிவை அகற்றுதில் சிரமம் ஏற்பட்டது.

இன்று அதிகாலையில் ஜேசிபி மூலம் சாலையில் சரிந்து கிடந்த மண் அகற்றப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணியளவில் போடி-மூணாறு மலைச்சாலையில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது. 7 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.


Tags : landslide ,mountain range ,Bodi-Munnar , Bodi-Munnar, hilltop, sudden landslide
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...